காஸா: பத்திரிகையாளர்கள் பலி; கேள்விக்குறியான மக்களின் உயிர்! குண்டுவீச்சு தாக்கு...
பழனி: செங்கல் சேம்பரில் வாலிபர் மர்ம சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தும்பலபட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 23) , இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் செங்கல் சேம்பரில் வேலை செய்து வருகிறார். இந்த சேம்பரில் வடமாநில இளைஞர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு சரவணன் சேம்பருக்கு செல்வதாக கூறிச் சென்ற நிலையில் மறுநாள் காலை வரை திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பழனி தும்பலபட்டி அருகே உள்ள தனியார் செங்கல் சேம்பரில் சரவணன் இறந்து கிடந்துள்ளார் . இது குறித்து வேலைக்கு வந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர் . இதையடுத்து வந்த உறவினர்கள் வடமாநில இளைஞர்களால் சரவணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சரவணன் உடலை போலீசார் மீட்க விடாமல் தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இது குறித்து உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இறந்த சரவணன் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சரவணன் உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியே உள்ள சாலையில் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நகர் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையிலான காவல்துறையினர் உயிரிழந்த சரவணனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்பு போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், குற்றவாளிகளை கைது செய்த பின்பே உடலை வாங்குவோம் என திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெளியே உயிரிழந்த சரவணனின் உறவினர்கள் அமர்ந்துள்ளனர்.