Coolie: "முதலில் நான் ஓகே சொல்லவில்லை; லோகேஷ் கனகராஜ்தான்.." - கூலி குறித்து நாக...
கோவை: கடைக்குச் சென்ற 6 வயது சிறுவனைத் தாக்கிய கரடி; சடலமாக மீட்ட வனத்துறை; வால்பாறையில் சோகம்
கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்தத் தோட்டங்கள் காடுகளை ஒட்டியே இருப்பதால் அங்குக் கடந்த சில ஆண்டுகளாக மனித – விலங்கு மோதல் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. யானை, கரடி, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அங்கு அதிகளவு இருக்கின்றன.

இவற்றில் சிறுத்தை மற்றும் கரடி அங்குள்ள குழந்தைகள், முதியவர்களைத் தாக்குவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த ஓராண்டில் 2 குழந்தைகளை சிறுத்தை தூக்கிச் சென்று கொன்றுள்ளது.
இந்நிலையில் அட்டக்கட்டி அருகே வேவர்வலி எஸ்டேட்டில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளிகள் பணியாற்றி வருகிறார்கள். அங்கு அஸ்ஸாம் மாநிலத்தை சராபத் அலி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தன் குடும்பத்துடன் எஸ்டேட் லைன் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு நூருல் இஸ்லாம் (6) என்ற மகன் உள்ளார்.

நேற்று மாலை 5.30 மணியளவில் சராபத் அலி, நூருலை அருகில் உள்ள கடைக்கு அனுப்பியுள்ளார். சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள கடைக்கு அடர்ந்த தேயிலைத் தோட்டத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். சுமார் 6.15 மணி வரை சிறுவன் திரும்பவில்லை.
சந்தேகமடைந்த சராபத் சக தொழிலாளர்கள் உதவியுடன் அவரைத் தேடினார். அப்போது புதருக்குள் சிறுவன் நூருல் உடல், பலத்த காயங்களுடன் முகம் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. காவல்துறை மற்றும் வனத்துறை சிறுவனின் உடலை மீட்டு விசாரித்து வருகிறார்கள்.


முதல்கட்ட விசாரணையில் சிறுவனை கரடி தாக்கியதில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் வால்பாறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.