மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!
பலூச் மக்கள் பயங்கரவாதிகள் அல்ல.. பாகிஸ்தானால் பாதிக்கப்பட்டவர்கள்: மனித உரிமை அர்வலர்கள்!
பலூசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் மஜீத் படைப்பிரிவை பயங்கரவாதக் குழுக்களாக அமெரிக்க அறிவித்துள்ளதற்கு, அந்நாட்டின் மூத்த மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் தளபதி, ஆசிம் முனீர் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானில் இயங்கி வரும் பலூசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் மஜீத் படைப்பிரிவை அமெரிக்கா பயங்கரவாதக் குழுக்களாக அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த அறிவிப்புக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பலூச் இன மக்கள் பயங்கரவாதிகள் அல்ல பாகிஸ்தான் அரசின் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என பலூச் மனித உரிமை ஆர்வலர் மீர் யார் பலூச் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
”கனிம வளம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணம் கடந்த 78 ஆண்டுகளாக, பாகிஸ்தான் அரசின் பயங்கரவாதம், பொருளாதாரக் கொள்ளை, அணு ஆயுத சோதனைகளினால் ஏற்பட்ட கதிரியக்க நச்சு, வெளிநாட்டு படையெடுப்பு மற்றும் தீவிரவாத பாகிஸ்தானின் “கொடூரமான ஆக்கிரமிப்பு” ஆகியவற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றது.
பலூசிஸ்தான் மக்கள் ஐஎஸ்-குராசான் (ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிரிவு) பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து இரையாக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அந்த அமைப்பு பலூச் அரசியல் கட்சிகள் மற்றும் அவர்களின் ஆர்வலர்களுக்கு எதிரான வன்முறைகளை அதிகரிக்க வேண்டுமென ஃபத்வா (மத கட்டளை) அறிவித்துள்ளனர்.
மேலும், பலூச் விடுதலைப் போராட்ட வீரர்கள் அமெரிக்காவுக்கு எதிராக எப்போதும் ஆயுதம் ஏந்தியது இல்லை. சோவியத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையின்போது இருதரப்புக்கும் எதிராக அவர்கள் எந்தவொரு செயலிலும் ஈடுபடவில்லை.
அமெரிக்காவில் நடைபெற்ற 9/11 தாக்குதலுக்குப் பிறகு, பலூசிஸ்தான் வழியாகச் சென்ற அமெரிக்க தளவாடங்கள் மீதோ அல்லது அவர்கள் வீரர்கள் மீதோ பலூச் போராட்டக்காரர்களோ அவர்களது மக்களோ எந்தவொரு தாக்குதலிலும் ஈடுபட்டது கிடையாது.
அமெரிக்காவால் தேடப்பட்ட ஒசாமா பின் லாடன், பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பில் அப்போட்டாபாட் பகுதியில் வசித்து வந்தார். பாகிஸ்தானின் ஆட்சியாளர்களே அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் தேவைக்காக, நாட்டினுள் போலியான ஜிகாத் மற்றும் பயங்கரவாதக் குழுக்களையும் உருவாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
எனவே, அமெரிக்கா பலூசிஸ்தானை தனி நாடாக அங்கீகரித்தால், அவர்களுக்கு மிதமான, நிலையான, ஜனநாயகத்துடன் கூடிய நட்பு நாடாக அது அமையும்” என அவர் பேசியுள்ளார்.
முன்னதாக, பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசினால், பலூசிஸ்தான் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, பலூச் இன மக்கள் அவ்வப்போது கொல்லப்படுவதும், கடத்தப்படுவதும் தொடர் கதையாகி வருதால், வளம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க வேண்டுமென பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பலூச் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சீனாவுக்கு சலுகை! வரிவிதிப்பு மேலும் 90 நாள்கள் நிறுத்திவைப்பு! டிரம்ப்