நாளுக்கு நாள் பிரம்மாண்டம்... மம்மூட்டி - மோகன்லால் படம் குறித்து இயக்குநர்!
பலுச். விடுதலைப் படை, மஜீத் படைப்பிரிவுகள் பயங்கரவாதக் குழுகள்: அமெரிக்கா அறிவிப்பு!
பலுசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் அதன் மற்றொரு பெயரான மஜீத் படைப்பிரிவை பயங்கரவாத அமைப்புகள் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் விடுதலைப் படை நடத்திய பல கொடூரத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
பாகிஸ்தானில் கனிம வளம் மிக்க மலைகள் நிறைந்த மாகாணமான பலூசிஸ்தானில், தங்களை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பலுசிஸ்தான் விடுதலைப் படை கோரிக்கை வைத்துவந்தது. இதனிடையே பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு, தற்கொலைப் படைத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்திடமும் சண்டையிட்டு வந்தது.
பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்ந்து கடுமையான மோதலில் ஈடுபட்டுவந்த பலுசிஸ்தான் விடுதலைப் படை, 2024 ஆம் ஆண்டு கராச்சி விமான நிலையம் மற்றும் குவெட்டா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலிலும் ஈடுபட்டது.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்தில், குவெட்டாவிலிருந்து பெஷாவருக்குச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கடத்திய பலுசிஸ்தான் விடுதலைப் படை, அப்போது நடத்திய தாக்குதலில் ஒன்றுமரியா பயணிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் 31 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின் போது ரயிலில் இருந்த 300-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகவும் பிடிக்கப்பட்டனர்.
இதுபோன்ற வன்முறை நடவடிக்கைகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், பாகிஸ்தானின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் அமெரிக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானை மையமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.