Pension Scheme: "பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலுக்கு வருமா?" - நிர்மலா சீத...
சீனாவுக்கு சலுகை! வரிவிதிப்பு மேலும் 90 நாள்கள் நிறுத்திவைப்பு! டிரம்ப்
சீனா மீதான வரி விதிப்பை மேலும் 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சீனா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். சீனாவுக்கு 30 சதவிகிதம் வரி விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் வரியை உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து, சீனாவுக்கு 145 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், வரி விதிப்பை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த கெடு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், சீனா மீதான வரி விதிப்பை மேலும் 90 நாள்களுக்கு, நவம்பர் மாதம் வரை நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
சீனாவுக்கு சலுகை?
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் காரணத்தை சுட்டிக் காட்டி, இந்திய பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
ஆனால், ரஷியாவிடம் இருந்து இந்தியாவைவிட சீனாதான் அதிகம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துவருகிறது. அந்நாட்டைவிட்டு விட்டு இந்தியா மீது மட்டும் டிரம்ப் வரி விதித்ததால் பல்வேறு கேள்விகள் எழுந்தன.
சீனா மீது டிரம்ப் வரியை அதிகரிக்காதது குறித்து அமெரிக்காவிலும் பல்வேறு தரப்பினா் சந்தேகங்களை எழுப்பியுள்ளனா்.
இந்த நிலையில், வரிவிதிப்பு அமல்படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 90 நாள்கள் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது இந்தியா, அமெரிக்கா உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.