மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!
இதெல்லாம் தேவையா தலைவரே? விமர்சனத்திற்கு ஆளாகும் ரஜினி!
நடிகர் ரஜினியின் பேச்சு பலருக்கும் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தைத் தாண்டி கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரம் பகுதிகளிலும் முதல் நாளுக்கான டிக்கெட்கள் அபாரமாக விற்றுத் தீர்ந்துள்ளன.
இதனால், ஆக. 14 ஆம் தேதி வெளியாகும் கூலியின் முதல் நாள் வசூல் ரூ. 150 கோடிக்கும் அதிகமாகத்தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சமூக வலைதளங்களில் நடிகர் ரஜினிகாந்த் கடுமையான விமர்சனத்திற்கும் ஆளாகி வருகிறார். காரணம், அண்மையில் நடைபெற்று முடிந்த கூலி இசைவெளியீட்டு விழாவின் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது.
நிகழ்வில் பேசிய ரஜினிகாந்த், அவருடன் பணியாற்றிய சக நடிகர்களைக் குறித்து உடல் தோற்ற ரீதியாக சில முகம் சுழிக்க வைக்கும் கருத்துகளைக் கூறினார்.
முக்கியமாக, நடிகர் சௌபின் சாகிர் குறித்து பேசும்போது, “முதலில் இவரைப் பார்த்தபோது என்ன சொட்டையாக இருக்கிறார்? இவர் சரியாக இருப்பாரா?” என்றெல்லாம் நினைத்தேன் என்றார்.
அடுத்ததாக, நடிகை ஸ்ருதி ஹாசனைக் குறிப்பிட்டு, “ஸ்ருதி மிகவும் கவர்ச்சியான நடிகை. கிளாமர் அதிகம்” எனச் சொல்லி சிரித்தார். (தன் நண்பர் கமல்ஹாசனின் மகளை இப்படியா வர்ணிப்பது என விமர்சிக்கிறார்கள்)
மேலும், அனிருத்தைப் பார்த்து, “அனிருத் நடத்தும் இசைக் கச்சேரிகளுக்கு பாட்டு கேட்க சிலர் வருகிறார்கள். அதைவிட, அனிருத்தைப் பார்க்கத்தான் பெண்கள் அதிகம் வருகிறார்கள். அனிருத் பாடும்போது அந்த இருட்டுக்குள் ஆண்களும் பெண்களும் இருப்பதை நினைத்துப் பாருங்கள்”
இதையெல்லாம் விட இப்படத்தில் ரஜினிக்காக நடிக்க வந்த ஆமீர் கானைப் பற்றி பேசும்போது, “பாலிவுட்டில் ஒரு பக்கம் ஷாருக்கான் இன்னொரு பக்கம் சல்மான் கான் இருக்க, நடுவில் குள்ளமாக ஆமீர் கான்” என்றார்.
சுவாரஸ்யமாகப் பேச நிறைய விஷயங்கள் இருக்கும்போது ஒருவரின் குறைகளைச் சுட்டிக்காட்டித்தான் அவரைப் பாராட்ட வேண்டுமா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். ரஜினியின் பேச்சைக் கேட்டு பலரும் சிரித்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதைத் தலைவர் எப்போது புரிந்துகொள்வாரோ என ரஜினி ரசிகர்களும் புலம்புகின்றனர்!
இதையும் படிக்க: இந்த சாதனையைச் செய்த முதல் இந்திய சினிமா கூலிதான்!