குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) கண்டறியும்: ஆய்வில் தகவல்
கூலிக்காக போலி விடுப்பு வேண்டாம்.. டிக்கெட்டுடன் விடுமுறை அளித்த நிறுவனம்!
நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ள நிறுவனம், இலவசமாக டிக்கெட்டும் வழங்கியுள்ளது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் வெளியாகி வந்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள், தற்போது தொடர் விடுமுறைகளை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறையையொட்டி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளது.
ரஜினி, விஜய், அஜித் போன்ற கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களின் படங்கள் வெளியாகும் நாள்களில், அவர்களின் ரசிகர்கள் போலி காரணங்களை சொல்லி அலுவலகத்துக்கு விடுப்பு எடுப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தென்னிந்தியாவில் பல கிளைகளைக் கொண்ட ‘யூனோ அக்வா கேர்’ என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இலவச டிக்கெட்டுடன் விடுப்பு அளித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை, பெங்களூரு, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் கிளைகளுக்கு அந்த நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மேலும், கூலி வெளியாகும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி, ’ரஜினிசம் 50 ஆண்டுகள்’ என்ற பதாகையின் கீழ், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உணவு மற்றும் நன்கொடை அளிப்பது, மக்களுக்கு இனிப்பு வழங்குவது போன்ற நிகழ்வும் நடைபெறவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் சுற்றறிக்கை இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அவர்களின் நிறுவனங்களை டேக் செய்து விடுமுறை கோரி பதிவிட்டு வருகின்றனர்.