மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!
8 ஆண்டுகள்.. 5 குழந்தைகள்..! நீண்டநாள் காதலியைக் கரம்பிடிக்கிறார் ரொனால்டோ!
போர்ச்சுகல் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்டநாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை கரம்பிடிக்கவுள்ளார்.
போர்ச்சுகீசிய கால்பந்து ஜாம்பவானும், அல் நசீர் அணியின் நட்சத்திரமுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிகஸை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஜார்ஜினா மோதிரம் அணிந்த புகைப்படம் ஒன்றையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
40 வயதான ரொனால்டோவும் ஆர்ஜென்டீனா - ஸ்பானிஸ் மாடலான ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் 2016 ஆம் ஆண்டு கூச்சி (gucci) ஸ்டோரில் முதல்முதலாகச் சந்தித்ததில் இருந்து இருவரும் காதலித்து வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாகத் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2010 ஆம் ஆண்டு முதல்முறையாக தந்தையானார். ஜூன் 17 அன்று கிறிஸ்டியானோ ஜூனியர் என்ற குழந்தை பிறந்தது. 14 வயதாகும் கிறிஸ்டியானோ ஜூனியர் தந்தையைப் போலவே கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.
முதல் குழந்தை பிறந்தும், அந்தக் குழந்தையின் தாய் யார்? என்பதை ரொனால்டோ வெளியிடாமல் ரகசியமாகவே வைத்திருந்தார்.
முதல் குழந்தையைப் பெற்ற ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ரொனால்டோவுக்கு 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி வாடகைத் தாய் மூலம் இரட்டையர்களாக ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அந்தக் குழந்தைகளுக்கு ஈவா மரியா மற்றும் மேடியோ என்று பெயரிட்டிருந்தார் ரொனால்டோ.
ஜார்ஜினாவும் 2016 முதல் டேட்டிங் செய்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த தம்பதியருக்கு 2017 ஆம் ஆண்டு நவம்பரில் அலனா மார்டினா என்ற பெண் குழந்தை பிறந்தது.
பின்னர், 2022 ஆம் ஆண்டில் பெல்லா எஸ்மரால்டா, ஏஞ்சல் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இதில், ஏஞ்சல் என்ற குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது. இதில், ரொனால்டோ மற்றும் அவரது காதலி ஜார்ஜினா இருவரும் சோகத்தில் மூழ்கினர்.
இந்த தருணத்தில்தான், ரொனால்டோ, விலை உயர்ந்த வைர மோதிரத்தை பரிசாக வழங்கி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டிருக்கிறார். அதன்படி, இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றனர்.
வைர மோதிரத்தின் விலை இவ்வளவா..?
ஜார்ஜினா அணிந்திருந்த மோதிரத்தில் பொருத்தப்பட்டுள்ள வைரம் 15 முதல் 30 காரட் வரை இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வைரத்தின் விலை 2 மில்லியன் முதல் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ. 16.8 கோடி முதல் ரூ. 42 கோடி வரை) இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
லோரல் டயமண்ட்ஸின் லாரா டெய்லர் தெரிவித்த தகவலின்படி மோதிரத்தின் குறைந்தபட்ச மதிப்பு 2 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று கூறுகிறார். அதே நேரத்தில் ரேர் கேரட் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் ஆனந்த், அந்த வைர மோதிரத்தை 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிட்டுள்ளார்.
நிகர சொத்துமதிப்பு
கால்பந்து விளையாட்டு மட்டுமின்றி விளம்பர மாடலிங்கிலும் அசத்திவரும் ரொனால்டோ அதிக சொத்துமதிப்பு கொண்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் உள்ளார்.
கால்பந்து உலகில் இதுவரை 900 க்கும் அதிகமான கோல்களை அடித்துள்ள ரொனால்டோவை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 50 கோடிக்கும் அதிகமான பின் தொடர்கின்றனர். இந்நிலையில், ரொனால்டோவின் நிகர சொத்துமதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.8500 கோடி) இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
சவூதி அரேபிய கால்பந்து கிளப்பான அல் நசீருடன் தனது ஒப்பந்தத்தை 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொண்ட ரொனால்டோவுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2,000 கோடி வரை இருக்கும் என்றும் கூறப்பட்டது. இதனால், ரொனால்டோவின் சொத்துமதிப்பு ரூ.10,000 கோடியைத் தாண்டும் என கணிக்கின்றன தகவலறிந்த வட்டாரங்கள்.