மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!
அரசியலமைப்பை பாதுகாப்பதை நிறுத்த மாட்டோம்! ராகுல் காந்தி
அரசியலமைப்பை தொடர்ந்து பாதுகாப்போம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, கடந்த வாரம் ஆதாரங்களை வெளியிட்டார்.
தொடர்ந்து, தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை எதிர்க்கட்சிகளை சேர்ந்த 300-க்கும் அதிகமான எம்பிக்கள் பேரணியாகச் சென்றனர்.
அப்போது ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை தில்லி காவல்துறையினர் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்துக்கு வருகை தந்த ராகுல் காந்தி, தொடர்ந்து அரசியலமைப்பை பாதுகாக்க போராடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் பேசியதாவது:
நாங்கள் அரசியலமைப்பை பாதுகாக்கிறோம். ஒருவருக்கு ஒரு வாக்கு என்பது நமது அரசியலமைப்பின் அடிப்படை. இதனை அமல்படுத்துவது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால், அவர்கள் தங்களின் கடமையைச் செய்ய தவறிவிட்டார்கள்.
பெங்களூர் மட்டுமல்ல நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று முறைகேடு நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கும் இது தெரியும். முன்பு ஆதாரங்கள் இல்லாமல் இருந்தது. தற்போது எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. நாங்கள் அரசியலமைப்பை பாதுகாக்கிறோம். தொடர்ந்து செய்வோம். நிறுத்த மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.