மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!
ஒட்டுமொத்த மக்களவையையும் கலைக்க வேண்டும்: திரிணமூல் காங்கிரஸ்
வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருந்தால் ஒட்டுமொத்த மக்களவையையும் கலைக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸின் மக்களவை குழுத் தலைவர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
குஜராத் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் ஒரே எண்ணை கொண்ட வாக்காளர்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தேர்தல் ஆணையம் தவிர்த்து வருவதாக அவர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
மக்களவை தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, கடந்த வாரம் ஆதாரங்களை வெளியிட்டார்.
இதேபோன்று, மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட சட்டப்பேரவை தேர்தல்களிலும் முறைகேடு நடைபெற்றதாக அவர் குற்றச்சாட்டை எழுப்பினார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களுடன் செவ்வாய்க்கிழமை அபிஷேக் பானர்ஜி பேசியதாவது:
“தில்லியில் நேற்று ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் போராட்டம் நடத்திய பெண் எம்பிக்கள் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்களிடம் தில்லி காவல்துறையினர் நடந்துகொண்ட விதம், தேர்தல் ஆணையத்தின் பயத்தை தெளிவாகக் காட்டுகிறது.
குஜராத் மற்றும் மேற்கு வங்கத்தில் ஒரே எண் (EPIC) கொண்ட வாக்காளர்கள் எப்படி இருக்கிறார்கள்? வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் ஒரே பெயரில் வாக்காளர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதற்கு பதிலளியுங்கள்.
வாக்காளர் பட்டியலில் பிழை இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. இதே பட்டியலின் அடிப்படையில்தான், நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், 240 பாஜக எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் முறைகேடு இருந்தால், முழு மக்களவையையும் மத்திய அரசையும் கலைக்க வேண்டும்.
நீங்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் தொடருங்கள். ஆனால், முதல் படி மக்களவையைக் கலைப்பதாக இருக்க வேண்டும். குஜராத்தில் வாக்காளர் பட்டியல் சரியாக இருப்பதாகவும் மேற்கு வங்கத்தில் திருத்தம் தேவையென்றும் கூறுகிறீகள். சிறப்பு திருத்தம் மேற்கொண்டால் நாடு முழுவதும் நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.