புதுச்சேரி ரெஸ்டோ பார் மாணவர் கொலை: 'கல்லூரி மாணவரைக் கொலை செய்தது ஏன்?’ - ஊழியர்கள் வாக்குமூலம்
சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த ஷாஜன் என்பவர், தன்னுடைய பிறந்த நாளை புதுச்சேரியில் மது விருந்துடன் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார்.
அதற்கான தன்னுடன் பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரியில் படித்த தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நண்பர்களை புதுச்சேரிக்கு அழைத்திருக்கிறார் ஷாஜன்.
அதையடுத்து புதுச்சேரிக்கு வந்த அவர்களுடன், கடந்த 9-ம் தேதி நள்ளிரவு சுமார் 11:30 மணியளவில் புதுச்சேரி மிஷின் வீதியில் உள்ள நடனத்துடன் கூடிய OMG (Oh My Gulp) என்ற ரெஸ்டோ பாரில் மது அருந்தினார்கள்.

தொடர்ந்து அவர்கள் நடனமாடும்போது, அங்கே ஏற்கெனவே நடனமாடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் மீது இடித்திருக்கிறார்கள்.
அதையடுத்து அங்கிருந்த பவுன்சர்களும், ஊழியர்களும் ஷாஜன் தரப்பினரை பாரில் இருந்து சுமார் 12:30 மணியளவில் வெளியேற்றி உள்ளனர். அதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் தங்களை ஏன் வெளியேற்றினீர்கள் என பவுன்சர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் மோதலாக மாறியது. அதில் கோபமடைந்த பார் ஊழியர் அசோக்ராஜ், சமையல் அறையிலிருந்த கத்தியை எடுத்து வந்து ஷாஜனின் நண்பரான சண்முகப் பிரியனைக் குத்தியிருக்கிறார்.
அப்போது தடுக்க வந்த ஷாஜனையும் அதே கத்தியால் குத்தினார். அதில் சண்முகப் பிரியன் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்துவிட, ஷாஜன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பெரியகடை போலீஸார், ரெஸ்டோ பாரின் உரிமையாளரான முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ராஜ்குமார், பார் சர்வீஸ் கேப்டன் அசோக்ராஜ், முத்தியால்பேட் மற்றும் டி.வி நகரைச் சேர்ந்த பூபதி, டேவிட், வாழைக்குளம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்குமார், விழுப்புரத்தைச் சேர்ந்த பவுன்சர் புகஷேந்தி, கடலூரைச் சேர்ந்த அரவிந்த், வடமாநில ஊழியர் அனிஷ் உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்திருப்பதுடன், இன்னும் 4 பேரைத் தேடி வருகின்றனர்.

இந்தக் கொலை குறித்து ரெஸ்டோ பாரின் உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் ஊழியர் அசோக் ராஜ் இருவரும் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், "ஷாஜன் 15-க்கும் மேற்பட்ட தன்னுடைய நண்பர்களுடன் வந்து மது அருந்தினார்.
அப்போது பாருக்கு வந்திருந்த பெண் ஒருவர் மீது அவரது நண்பர்கள் மோதியதால் தகராறு ஏற்பட்டது. உடனே பவுன்சர்கள் ஷாஜனின் நண்பர்களை வெளியேறும்படி கூறினர்.
ஆனால் அவர்கள் வெளியில் செல்லாமல், ரெஸ்டோ பாரின் முதல் தளத்துக்குச் சென்று மீண்டும் நடனமாடினர். அப்போது மறுபடியும் அங்கிருந்த வேறொரு பெண்ணின் மீது இவர்களின் கை பட்டிருக்கிறது.
அதனால் அங்கேயும் பிரச்னை ஏற்பட்டதால் அவர்களை பாரில் இருந்து வெளியே போகும்படி கூறினோம். அப்போது அவர்கள், நாங்கள் போகமாட்டோம் என்று கூறி எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனால் அங்கிருந்த பவுன்சர்கள் மூலம் அவர்களை வெளியேற்றினோம். அதையடுத்து அவர்கள் பணம் கொடுக்கவில்லை என்பதால், ஷாஜன் என்பவரை மட்டும் அழைத்தோம்.
ஆனால் அவருடன் சண்முகப் பிரியன் உள்ளிட்ட சிலரும் பாருக்குள் வந்தனர். அப்போது மது குடித்ததற்கு அவர்களிடம் பணம் கேட்டபோது, `பாரில் இருந்து எங்களை வெளியேற்றிய பிறகு நாங்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும்’ என்றனர்.

அதனால் அவர்களுக்கும் எங்களுக்கும் மோதல் ஏற்பட்டது. அந்தச் சத்தம் கேட்டு பாரின் சமையலறையிலிருந்து ஓடிவந்த ஊழியர்கள், அவர்களைத் தாக்கினர். அப்போது அசோக்ராஜ் என்ற ஊழியர் அவர்களைக் கத்தியால் தாக்கினார்.
அதில் எதிர்பாராத விதமாக சண்முகப் பிரியன் மற்றும் ஷாஜனுக்குக் கத்திக் குத்து விழுந்து, சண்முகப் பிரியன் இறந்துவிட்டார். பெண்கள் மீது அவர்கள் இடித்ததுதான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம்" என்று தெரிவித்திருக்கின்றனர்.
அதையடுத்து கொலை செய்யப்பட்ட சண்முகப் பிரியனின் உடற்கூராய்வு சோதனைக்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த ஷாஜன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.