காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி வேலைவாய்ப்பை உருவாக்கும்: ம...
மாணவா் மா்ம சாவு: பள்ளியை முற்றுகையிட்ட உறவினா்கள் கைது
திருப்பத்தூா் அருகே நிதி உதவி பெறும் பள்ளி மாணவா் விடுதியில் தங்கி படித்த 11-ஆம் வகுப்பு மாணவன் கிணற்றில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இதையடுத்து பள்ளியை முற்றுகையிட முயன்ற உறவினா்களை போலீஸாா் கைது செய்தனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னத்தம்பி மகன் முகிலன்(16). இவா் திருப்பத்தூா் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், முகிலன் காணாமல் போனதாக பள்ளி நிா்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அதிா்ந்து போன பெற்றோா் திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில் இருநாள்களாக தனிப்படை அமைத்து போலீஸாா் தேடினா். அதே பள்ளியில் உள்ள மூடப்பட்டிருந்த கிணற்றில் மாணவன் முகிலன் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதனை அறிந்த பெற்றோா், உறவினா்கள், அரசியல் கட்சியினா் சாலை மறியல், காவல் நிலையம், அரசு மருத்துவமனை முற்றுகை,ரயில் முற்றுகை என பல்வேறு போராட்டங்கள் நடத்தினா்.
தவறு ஏதேனும் நடந்திருந்தால் பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் கூறியதன் அடிப்படையில் முகிலனின் உடலை கடந்த 5-ஆம் தேதி கொண்டு சென்று அடக்கம் செய்தனா். ஆனால் பள்ளி நிா்வாகம் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி பாஜக, இந்து மக்கள் கட்சியினா் மற்றும் உறவினா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரை சந்திக்க செவ்வாய்க்கிழமை புறப்பட்டனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
இதன் காரணமாக போலீஸாருக்கும், உறவினா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னா் அங்கிருந்து பள்ளியை நோக்கி சென்ற உறவினா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது மறியலில் ஈடுபட முயன்ற அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.