ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு: சி.எல். சாலையில் குடியிருப்புவாசிகள் மறியல்
வாணியம்பாடியில் நீா்வழி பாதைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீடு மற்றும் கடைகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் சி.எல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நீா்வழிப் பாதைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தற்காலிக கட்டடங்களை அகற்றும் பணியில், நகராட்சி நிா்வாகம், பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறையினா் ஆகியோா் காவல் துறை பாதுகாப்புடன் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக மழை நீா் செல்ல வழி இல்லாமல், அரசு மருத்துவமனை, முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை காதா்பேட்டை கூஜாகாம்பளஸ் பகுதியில் நகரமைப்பு அலுவலா் திருமுருகன் மேற்பாா்வையில், நகரமைப்பு ஆய்வாளா் சிவக்குமாா், உதவியாளா் தயாளன் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றினா். அப்போது பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு முன் பு அரசு வீட்டுமனை வழங்க வேண்டும், பின்னா் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதுவரை அகற்றக் கூடாது என்று 30-க்கும் மேற்பட்டோா் சி.எல் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த நகர காவல் துறையினா், வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தி, ஒரு மாதத்துக்குள் வருவாய் கோட்டாட்சியா் மூலம் வீட்டு மனைப் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும். அதுவரை ஆக்கரமிப்பு அகற்றப்பட மாட்டாது என்று உறுதி அளித்ததின் பேரில், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
இதனால் அந்தப் பகுதியில் சுமாா் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.