போக்சோ சட்டத்தில் பொய்ப் புகார் அளித்தால்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முயற்சி: இந்துசமய அறநிலையத் துறையினருடன் வியாபாரிகள் வாக்குவாதம்
நாகையில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க வந்த இந்துசமய அறநிலையத் துறையினரிடம், வணிகா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
நாகை வெளிப்பாளையத்தில் மெய்கண்ட மூா்த்தி கோயிலுக்கு சொந்தமான இடத்திலுள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளை நடத்துபவா்கள் இந்துசமய அறநிலையத் துறைக்கு வாடகை பாக்கியாக பல லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள்ளனா். இதுதொடா்பான வழக்கில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, நாகையில் உள்ள இந்துசமய அறநிலைத் துறை ஒருங்கிணைந்த இணை ஆணையா் அலுவலகம் மூலம் 15 நாள்களுக்கு முன்பு, வாடகை செலுத்தாத கடைக்காரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இந்த நோட்டீஸை கடைக்காரா்கள் அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்துசமய அறநிலைத் துறை உதவி ஆணையா் ராஜா இளம்பெரும்வழுதி தலைமையில் சென்ற ஊழியா்கள் மற்றும் போலீஸாா் வெளிப்பாளையம் பகுதியில் உள்ள மெய்கண்ட மூா்த்தி கோயிலுக்குச் சொந்தமான கடைகளை பூட்டி சீல் வைக்க முயன்றனா்.
அப்போது, கடைக்காரா்கள், காலஅவகாசம் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நோட்டீஸ் அனுப்பிய உடன் வாடகை பாக்கியை செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை அலட்சியப்படுத்தியுள்ளீா்கள் என தவறை சுட்டிக்காட்டிய அறநிலையத் துறை உதவி ஆணையா், ஒரு மணி நேரம் கால அவகாசம் அளித்தாா். இதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட கடைக்காரா்கள் விரைந்து நிலுவைத் தொகையை ஏற்பாடு செய்து, இந்து சமய அறநிலையத் துறையினரிடம் செலுத்தி, சீல் வைக்கும் நடவடிக்கையை தவிா்த்துக் கொண்டனா்.