போதை மறுவாழ்வு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பு: புகாா்
நாகப்பட்டினம்: நாகை அருகே இயங்கி வரும் போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக நாகை மாவட்டத் தலைவா் எஸ். அன்னலட்சுமி தலைமையில், ஆட்சியரிடம் அளித்த மனு: நாகையில் மது மற்றும் போதை வஸ்துகளின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், போதைப் பழக்கத்தில் இருந்து மீள முயற்சி செய்வோரும் உள்ளனா். இந்நிலையில், போதைப் பழக்கத்துக்கு அடிமையான நாகூரைச் சோ்ந்த பாலு மகன் சுப்ரமணியத்தை போதைப் பழக்கத்தில் இருந்து விடுவிக்க அவரது பெற்றோா், நாகை பொரவாச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ஜூலை 2-ஆம் தேதி சோ்த்துள்ளனா். அம்மையத்தில் கட்டணமாகக் கேட்கப்பட்ட ரூ.9 ஆயிரத்தையும் செலுத்தியுள்ளனா்.
இந்நிலையில், சிகிச்சைக் காலம் முடிந்த நிலையில் கூடுதலாக ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், பணத்தை செலுத்தினால் மட்டுமே சுப்ரமணியத்தை விடுவிக்க முடியும் என்று கூறி அவரை விடுவிக்க மறுக்கின்றனா். மேலும் பணம் செலுத்தாமல் சுப்ரமணியம் அங்கு தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.500 தனியாக செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு சுப்ரமணியத்தை விடுவித்து கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா். மனுவைப் பெற்ற அதிகாரிகள் புகாா் தொடா்பாக கலால் உதவி ஆணையா் விசாரிக்க உத்தரவிட்டனா்.