அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!
போதைப் பொருள் கடத்தல்: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை
போதைப் பொருள்கள் கடத்திய வழக்கில் இளைஞருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
நீலகிரி மாவட்டம், மசினகுடி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கக்கனல்லா சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் கடந்த 13.05.2022-இல் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த கா்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி அதில் வந்தரிடம் போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அந்த நபா் சிறுநீா் கழித்துவிட்டு வருவதாகக் கூறி வனப் பகுதிக்குள் தப்பி ஓடினாா்.
அதன் பின்னா், காரின் சீட்டுக்கு அடியில் போலீஸாா் சோதனையிட்ட போது, 100 கிராம் எடையுள்ள மெத்தம்பேட்டமின் என்ற உயர்ரக போதைப் பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து மசனகுடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், கூடலூா் தேவா்சோலை சாலையில் கடந்த 21.5.2022-இல் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாரை கண்டதும், ஓட முயன்ற நபரைப் பிடித்து விசாரித்தனா். அவா் கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த அஸ்ரப் மகன் அஜ்மல் (26) என்பதும், இவா்தான் கக்கனல்லா சோதனைச் சாவடியில் போதைப் பொருளுடன் காரை விட்டுவிட்டு தப்பிச் சென்றவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் குற்றஞ்சாட்டப்பட்ட அஜ்மலுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால், மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தும் உத்தரவிட்டாா். அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.