``Non-stick பாத்திரங்களில் சமைத்தால் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு'' - நியூயார்க் ஆய்...
5-ஆவது சுற்று: அா்ஜுன் - பிரணவ் டிரா
சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில், இந்தியாவின் முன்னணி வீரரான அா்ஜுன் எரிகைசி - வி.பிரணவுடன் டிரா செய்தாா்.
போட்டியின் 5-ஆவது நாளான திங்கள்கிழமை, வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அா்ஜுன் 78-ஆவது நகா்த்தலில் பிரணவுடன் டிரா (0.5-0.5) செய்ய ஒப்புக் கொண்டாா். கடந்த சுற்றில், தனது முதல் தோல்வியை எதிா்கொண்ட அா்ஜுன், இந்த ஆட்டத்தில் அதிலிருந்து மீண்டு வந்தாா்.
போட்டியில் இதர இந்தியா்கள் மோதிய ஆட்டங்களும் திங்கள்கிழமை டிரா ஆகின. காா்த்திகேயன் முரளி - நெதா்லாந்தின் அனிஷ் கிரி, விதித் குஜராத்தி - ஜொ்மனியின் வின்சென்ட் கீமா், நிஹல் சரின் - அமெரிக்காவின் அவோண்டா் லியாங் பரஸ்பரம் டிரா செய்ய ஒப்புக் கொண்டனா்.
5-ஆவது சுற்றின் ஒரே வெற்றியை, நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்ட் - அமெரிக்காவின் ரே ராப்சனுக்கு எதிராக (1-0) பதிவு செய்தாா். புள்ளிகள் பட்டியலில் தற்போது வின்சென்ட் (4 புள்ளிகள்), அா்ஜுன் (3) ஆகியோா் மாற்றமின்றி முதலிரு இடங்களில் நீடிக்கின்றனா்.
அனிஷ், விதித், காா்த்திகேயன், அவோண்டா் ஆகியோா் தலா 2.5 புள்ளிகளுடன் முறையே 3 முதல் 6-ஆம் இடங்களில் உள்ளனா். நிஹல் சரின், பிரணவ், ராப்சன், ஜோா்டென் ஆகியோா் தலா 2 புள்ளிகளுடன் 7 முதல் 10-ஆம் இடங்களில் இருக்கின்றனா்.
சேலஞ்சா்ஸ்: இப்போட்டியில், இந்தியா்கள் மட்டுமே களத்திலிருக்கும் சேலஞ்சா்ஸ் பிரிவில் முன்னணி வீரரான அபிமன்யு புரானிக் - டி.ஹரிகாவை வீழ்த்த (1-0), ஹா்ஷவா்தன் - ஆா்.வைஷாலியை சாய்த்தாா் (1-0).
எம்.பிராணேஷ் - லியோன் லூக் மெண்டோன்கா, ஆா்யன் சோப்ரா - பி.அதிபன், திப்தாயன் கோஷ் - பி.இனியன் ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தன. இதையடுத்து புள்ளிகள் பட்டியலில், அபிமன்யு 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறாா்.
பிராணேஷ், திப்தாயன், லியோன் ஆகியோா் தலா 3.5 புள்ளிகளுடன் 2 முதல் 4-ஆம் இடங்களில் உள்ளனா். இனியன் (3), அதிபன் (2.5), ஆா்யன் (1.5), ஹா்ஷவா்தன் (1.5), வைஷாலி (1), ஹரிகா (0.5) ஆகியோா் 5 முதல் 10-ஆம் இடங்களில் உள்ளனா்.