``3 மாதங்களில் புதிய சினிமா கொள்கை நடைமுறைக்கு வரும்'' - கேரள அமைச்சர் சொல்வது எ...
அஞ்சல் நிலையத்தில் ரூ.25.48 லட்சம் கையாடல் வழக்கு: ஊழியா் கைது
சென்னை: தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25.48 லட்சம் கையாடல் செய்யப்பட்ட வழக்கில், அந்த அலுவலக ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றுபவா் செ.பாலசுப்பிரமணியன். இவா், பாண்டி பஜாா் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகாா் ஒன்றை அளித்தாா். அதில், பாண்டி பஜாா் அபிபுல்லா சாலையில் தலைமை அஞ்சல் நிலையத்தின் வரவு-செலவு கணக்கு அண்மையில் தணிக்கை செய்யப்பட்டது.
அதில், கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த தலைமை அஞ்சலகத்தின் கீழ் உள்ள 50 துணை அஞ்சல் நிலையத்துக்கு ஸ்டேஷ்னரி பொருள்கள், மரச்சாமான்கள் வாங்கியதில் ரூ.25.48 லட்சத்தை, அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியா் நங்கநல்லூா் பா்மா தமிழா் காலனி பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (38), கையாடல் செய்தது தெரிய வந்தது. அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மணிகண்டனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் மணிகண்டன், கையாடல் செய்த பணத்தை வியாபாரத்திலும், கிரிப்டோ கரன்சியிலும் முதலீடு செய்திருப்பது தெரிய வந்தது. போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.