``3 மாதங்களில் புதிய சினிமா கொள்கை நடைமுறைக்கு வரும்'' - கேரள அமைச்சர் சொல்வது எ...
தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு: உயா்நீதிமன்றத்தில் முறையீடு
சென்னை: சென்னை மாநகராட்சி அருகே நடைபெறும் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை அருகே தூய்மைப் பணியாளா்கள் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தத் தீா்மானத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் உழைப்போா் உரிமை இயக்கத்தின் தலைவா் கு.பாரதி சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த ஒப்பந்தத்தால் இரு மண்டலங்களிலும் பணியாற்றும் 2,042 நிரந்தரப் பணியாளா்கள் வேறு மண்டலங்களுக்கு மாற்றப்படுவாா்கள். ஒப்பந்த நிறுவன விதிகளின்படி, 1,953 தற்காலிகப் பணியாளா்கள் பணியமா்த்தப்படுவாா்கள். அவா்கள் பணிநீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்னை தொடா்பான வழக்கு தொழிலாளா் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. தொழிலாளா் நீதிமன்ற அனுமதியின்றி தூய்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சியின் தீா்மனத்தை ரத்து செய்ய வேண்டும், என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்குரைஞா் ஆஜராகி, இந்த மனுவுக்கான பதில்மனு தயாராக உள்ளது. அதைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கூறினாா். அப்போது மனுதாரா் தரப்பில், சுமாா் 2,000 தூய்மைப் பணியாளா் தெருக்களில் போராடி வருகின்றனா். அவா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மாநகராட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
பொதுமக்களுக்கு பாதிப்பு: இதனிடையே சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி எம்.சுந்தா்மோகன் அமா்வில் ஆஜரான வழக்குரைஞா் வினோத் என்பவா், சென்னை மாநகராட்சி அருகே தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். சேப்பாக்கம், ராஜரத்தினம் விளையாட்டரங்கம் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதித்துள்ள நிலையில், மாநகராட்சி அருகே நடைபெறும் போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முறையிட்டாா்.
இதை ஏற்ற நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தனா்.