``ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை'' - மோடி - ஜெலன்ஸ்கி தொலைபேசி பேச்சு; உக்ர...
``3 மாதங்களில் புதிய சினிமா கொள்கை நடைமுறைக்கு வரும்'' - கேரள அமைச்சர் சொல்வது என்ன?
கேரள மாநிலத்தில் சினிமா படப்பிடிப்பு தளங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
ஹேமா கமிட்டி விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சினிமாவில் புதிய மாற்றங்களை கொண்டு வருவதற்காக காண்கிளேவ் திருவனந்தபுரம் சட்டசபை கட்டடத்தில் இம்மாதம் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடந்தன. அதில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செறியான், நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு நாள்கள் நடந்த அந்த காண்கிளேவின் நிறைவுநாளில் பழம்பெரும் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் பேசிய சில கருத்துகள் சர்ச்சையாயின. பட்டியலினத்தவர்களுக்கும், பெண்களுக்கும் சினிமா தயாரிக்க வழங்கப்படும் ஒன்ரை கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதற்கு முன் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என அடூர் கோபாலகிருஷ்ணன் பேசியது விவாதத்தை கிளப்பியிருந்தது.
இந்த நிலையில் காண்கிளேவில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகளின்படி கேரள மாநிலத்தில் இன்னும் மூன்று மாதத்திற்குள் புதிய சினிமா கொள்கை ஏற்படுத்தப்படும் என மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செறியான் கூறியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் சஜி செறியான் கூறுகையில், "சினிமாவில் ஆண்களின் கை மட்டும் ஓங்கியிருந்தால் போதாது. பெண்கள் சினிமா துறையில் முக்கிய பொறுப்புகளில் வரவேண்டும். மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பில் பதவிக்குவர பெண்கள் முதன்முறையாக போட்டியிடுகிறார்கள். பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. அம்மா அமைப்பில் உள்ள பிரச்னைகளை அவர்கள் விவாதித்து முடிவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

சினிமாவில் பரஸ்பரம் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் அரசின் அறிவுரையாக உள்ளது. அதற்காகத்தான் சினிமா காண்கிளேவ் நடத்தப்பட்டது. வெவ்வேறு விதமாக சிந்திக்கும் அனைவரையும் ஒன்றிணைப்பதற்காகதான் காண்கிளேவ் நடத்தப்பட்டது. அதன் பலனாக நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாநில சினிமா கொள்கை நடைமுறைக்கு வரும்போது மாற்றத்துக்கான பணிகள் முழுமையடையும். கேரளா மாநிலத்தின் புதிய சினிமா கொள்கை மூன்று மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும்" என்றார்.