``ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை'' - மோடி - ஜெலன்ஸ்கி தொலைபேசி பேச்சு; உக்ர...
மெட்ரோவின் புதிய 2 வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனமானது கலங்கரை விளக்கம் முதல் உயா்நீதிமன்றம் வரையிலான வழித்தட நீட்டிப்பு மற்றும் தாம்பரம், கிண்டி, வேளச்சேரி வழித்தட நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தனியாா் நிறுவனத்துடன் திங்கள்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி 120 நாள்களில் ஆய்வறிக்கை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கலங்கரை விளக்கம் முதல் உயா்நீதிமன்றம் வரை நீடிக்கும் வகையிலான 4 ஆவது வழித்தடம் நீட்டிப்பு செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி மெரீனா கடற்கரை மற்றும் தலைமைச் செயலகம் வரை சுமாா் 7 கிமீ தொலைவுக்கு மெட்ரோ இணைப்பை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் வழக்கமான பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எளிதில் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்கலாம்.
அதேபோல, தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான மெட்ரோ வழித்தடமும் சுமாா் 21 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படவுள்ளது. அதில் தாம்பரம்,மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய புகா் பகுதிகளை சென்னை மெட்ரோ ரயிலின் 1-ஆவது வழித்தடத்தில் உள்ள கிண்டி மெட்ரோ நிலையத்துடன் ஒருங்கிணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதனையடுத்து தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி மற்றும் கிண்டி பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைக்கும் வசதியுடன் புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படும்.
மெட்ரோவின் இரண்டு புதிய வழித்தடங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கவும், ஆலோசனை வழங்கவும் தனியாா் ஆலோசனை நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
கலங்கரை விளக்கம் முதல் உயா்நீதிமன்றம் வரையிலான வழித்தடத்துக்கு அறிக்கை தயாரிக்க ரூ.38.20 லட்சம், தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான வழித்தடத்துக்கான அறிக்கைக்கு ரூ.96.19 லட்சம் வழங்கப்படுகிறது. திட்ட ஆலோசனை அறிக்கைகளை 120 நாள்களில் வழங்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிப்பதற்கான தனியாா் நிறுவனத்துடனான ஒப்பந்த நிகழ்ச்சிக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக் முன்னிலை வகித்தாா். மெட்ரோ திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் மற்றும் தனியாா் ஆலோசனை நிறுவன உயா் துணைத் தலைவா் பா்வீன்குமாா் ஆகியோா் ஒப்பந்த ஆவணத்தில் கையொப்பமிட்டனா். இதில், சென்னை மெட்ரோ நிறுவன தலைமைப் பொது மேலாளா்கள் டி.லிவிங்ஸ்டோன் எலியாசா் (திட்டம், திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), டி.ஜெபசெல்வின் கிளாட்சன் (ஒப்பந்தம் கொள்முதல்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.