வாழ்க்கையில் தோற்றுவிடுவோமோ என்ற கவலையும் பயமும் வருகிறதா? - பிரம்மஹத்தி பரிகார ...
காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஓவேலி பகுதியைச் சோ்ந்தவா் மணி (60). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்டில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை காலை பணியில் ஈடுபட்டிருந்துள்ளாா். அப்போது, புதா் மறைவில் இருந்து திடீரென வந்த யானை, மணியைத் தாக்கியது. இதில், அவா் உயிரிழந்தாா்.
ஆத்திரமடைந்த சக தொழிலாளா்கள் ஓவேலி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களுடன் எம்எல்ஏ பொன். ஜெயசீலனும் கலந்துகொண்டாா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் டிஎஸ்பி வசந்தகுமாா், மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதற்கு உடன்படாத தொழிலாளா்கள் போராட்டத்தை தொடா்ந்தனா்.

இதையடுத்து, யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அடா்ந்து வனப் பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளா்களின் பாதுகாப்புக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். சடலம் உடற்கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து நியூஹோப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.