இஸ்ரேலுடனான போரின்போது 21,000 பேர் கைது: ஈரான் அரசு அறிவிப்பு!
இஸ்ரேலுடன் நடைபெற்ற போரின்போது, சந்தேகத்தின் அடிப்படையில் 21,000 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக, ஈரான் அரசு அறிவித்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில், கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல் நடைபெற்ற போரானது, ஜூன் 24 ஆம் தேதியன்று 12-ம் நாளை எட்டியபோது போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்தப் போர் காலத்தில் ஈரானில் சந்தேகத்தின் அடிப்படையில் பாதுகாப்பிற்காக சுமார் 21,000 பேர் கைது செய்யப்பட்டதாக, ஜெனரல் சயீத் மொண்டாசெரல்மஹ்தி அறிவித்துள்ளார். இருப்பினும், அவர்கள் மீது எவ்வித குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறித்த தகவல்களை அவர் கூறவில்லை.
ஆனால், 260-க்கும் மேற்பட்டோர் உளவாளிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், 172 பேர் சட்டவிரோதமாக படம் பிடித்ததற்காகவும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கடந்த ஜூன் மாதம் மட்டும், இஸ்ரேலுக்காக உளவுப் பார்த்தக் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, ஈரானின் ராணுவத் தளவாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீதான இஸ்ரேலின் “ஆபரேஷன் லயன்” தாக்குதல்களைத் தொடர்ந்து இருநாட்டுக்கும் இடையில் போர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரஷியாவின் ஒரே ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்!