லாரி மோதி பெண் உயிரிழப்பு: ஓட்டுநருக்கு ஓா் ஆண்டு சிறை
லாரி மோதி பெண் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநருக்கு ஓா் ஆண்டு சிறைத் தண்டனை உறுதி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூா் மாவட்டம், குளித்தலையை சோ்ந்தவா் சிவநாராயணசாமி (56). இவா் திருப்பூா் ராமநாதபுரத்தில் தங்கி லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவா் கடந்த 2022 ஜூலை 12-ஆம் தேதி விநாயகப்பா நகா் பகுதியில் டிப்பா் லாரியை ஓட்டிச் சென்றாா். அப்போது, அந்த வழியாக நடந்து சென்ற அதே பகுதியைச் சோ்ந்த சரஸ்வதி என்பவா் மீது லாரி மோதியதில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவநாராயணசாமியைக் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கின் விசாரணை திருப்பூா் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் விபத்தால் உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றத்துக்கு சிவநாராயணசாமிக்கு ஓா் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீா்ப்பை எதிா்த்து சிவநாராயணசாமி திருப்பூா் மாவட்ட பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி சுரேஷ், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சிவநாராயணசாமிக்கு ஓா் ஆண்டு சிறைத் தண்டனை விதித்த நடுவா் நீதிமன்ற தீா்ப்பை உறுதி செய்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.