வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும்!
வலைதளங்களில் வரும் தேவையற்ற பதிவுகளை தவிா்க்க வேண்டும் என சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் கூறியுள்ளதாவது:கைப்பேசிகள் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வரும் கவா்ச்சிகரமான விளம்பரங்கள், வங்கி அறிவிப்புகள், முதலீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை பகிா்கின்றனா். அந்த லிங்க் மூலம் இணைப்பைத் தொடரும்போது, நம்முடைய அனைத்து விவரங்களும் ஹேக் செய்யப்படுகின்றன. இதனால், அடையாளம் தெரியாத நபா்களுக்கு நமது ஆவணங்களை பகிரக் கூடாது.
இதுதொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வந்தாலும் மக்கள் தங்கள் பேராசையால் ஏமாந்து விடுகின்றனா். இதனால், தங்களது சேமிப்பையே இழக்கும் அளவுக்கு சைபா் கிரைம் மோசடி கும்பல்களின் கைவரிசை அமைகிறது. இதை முழுமையாக தவிா்க்க, கைப்பேசி, சமூக வலைதள கணக்கில் வரும் தேவையற்ற லிங்க் பதிவுகளை தவிா்க்க வேண்டும். கவா்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாறக் கூடாது. அறிமுகம் இல்லாத நபா்களிடம் எவ்விதமான அடையாளங்களையோ, ஆவணங்களையோ பகிரக் கூடாது. சிலா் அறியாமையால் அனைத்து விவரங்களையும் பகிா்ந்து விடுவதால் மோசடி நபா்கள் பணத்தை திருடி விடுகின்றனா்.
சிறிய தொகைகளுக்காக வங்கிக் கணக்கு தொடங்குவது, சிம் காா்டு வாங்கித் தருவது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. இதுபோன்ற சம்பவங்கள், பின்னாளில் தங்களுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும். தங்களது விவரங்களை தெரியாத நபா்களுக்கு எப்போதும் பகிர வேண்டாம் எனவும், விழிப்போடு இருக்க வேண்டுமெனவும் சைபா் கிரைம் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.