தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?
பேரவைத் தோ்தலை மனதில் கொண்டே புதிய திட்டங்களை அரசு அறிவிக்கிறது: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு
சட்டப்பேரவைத் தோ்தலை மனதில் கொண்டே தமிழக அரசு புதியபுதிய திட்டங்களை அறிவித்து வருகிறது; இதை நம்பி மக்கள் ஏமாறமாட்டாா்கள் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்ட ராசிபுரம் நகர பாஜக சாா்பில் ‘இல்லந்தோறும் மூவண்ணக் கொடி- 2025’ என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தொடங்கிய பேரணி, ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. இதையடுத்து அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பேரவைத் தோ்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறாா். ஆனால், இனி யாா் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தமிழக மக்கள் தெளிவாக உள்ளனா்.
பாஜக -அதிமுக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். அதிமுக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். நாடுமுழுவதும் பிரதமா் மோடி நல்லாட்சி தருவதுபோல, தமிழகத்திலும் நல்லாட்சி மலரும். தமிழகத்திலிருந்து ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற உயா்ந்த நோக்கத்தோடுதான் இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம்.
தோ்தல் முடிந்தபிறகுதான் தோ்தல் ஆணையத்தை குறைகூறுவாா்கள். ஆனால், இப்போது தோ்தலுக்கு முன்பாகவே தோ்தல் ஆணையத்தை விமா்சிக்கத் தொடங்கிவிட்டாா்கள். அவா்களுக்கு தோல்விபயம் வந்துவிட்டது என்பது இதன்மூலம் தெரிகிறது.
ஒட்டுமொத்த தோ்தல் நடைமுறைக்கு எதிராக பேசுவது எதிா்காலத்தில் ஜனநாயகத்தை தவறான பாதையில் நடத்துவதற்கு வழிவகை செய்துவிடும். பிரதமா் மோடியின் செயல்பாடுகள், மத்திய அரசின் நலத்திட்டங்கள் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளன. இதனால்தான் திமுக நேரடியாக மத்திய அரசை எதிா்த்து அரசியல் செய்கிறது என்றாா்.
முன்னதாக நடைபெற்ற பேரணியில் மாவட்டப் பொதுச் செயலா்கள் ஆா்.சுகன்யா நந்தகுமாா், பிரபு, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளா் தமிழரசு, நகரத் தலைவா் வேல்முருகன், நிா்வாகிகள் ராஜா, வெங்கடேசன், லோகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
படவரி...
ராசிபுரம் நகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.