தூய்மைப் பணியாளர்களின் மாண்பை விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்
கவின் கொலை வழக்கு: தந்தை, மகனுக்கு 13 நாள் சிறை!
பாளையங்கோட்டையில் மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்துள்ள நிலையில், முக்கிய குற்றவாளிகளான சுர்ஜித், அவரது தந்தை சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணனுக்கு 13 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்தவா் கவின் செல்வ கணேஷ் (27). இவா், கடந்த ஜூலை 27 ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக பாளையங்கோட்டைச் சோ்ந்த சுா்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளா் சரவணன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். தொடா்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் இருவரும் 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனா்.
அவா்களிடம் சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமாா் நவ்ரோஜ் தலைமையில் ஒரு குழு, காவல் ஆய்வாளா் உலகராணி தலைமையில் ஒரு குழு, சிபிசிஐடி உதவி ஆய்வாளா்கள் அடங்கிய ஒரு குழு என மொத்தம் 3 குழுவாக பிரிந்து விசாரணை நடத்தினா். சுா்ஜித்தின் தாயாா் கிருஷ்ணகுமாரி மற்றும் சகோதரியிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடா்ந்து 4 பேரின் வாக்குமூலங்களின் அடிப்படையில், சுா்ஜித்தின் சித்தி மகனான தூத்துக்குடியைச் சோ்ந்த ஜெயபால் (29) என்பவரையும் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவர், ‘கவின் செல்வ கணேஷை கொலை செய்து விட்டு அங்கிருந்து சுா்ஜித் தப்பியபோது அவருக்கு ஜெயபால் சில உதவிகள் செய்து, ஆலோசனை வழங்கியது தெரியவந்தது. இதனால் இவ்வழக்கில் அவரும் கைது செய்து விசாரிக்கப்பட்டு வருகிறாா். இவரை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
13 நாள்கள் நீதிமன்றக் காவல்
கவின் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸாசாரால் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோரின் இரண்டு நாள் காவல் இன்றுடன் முடிவடைந்தது. அவர்களை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்பு சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். வழக்கை மேலும் விசாரிக்க காவல் நீட்டிப்பு கேட்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரையும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு
விசாரணையின்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிபதி ஹேமாவிடம் அளித்த பரபரப்பான வாக்குமூலங்கள் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடிக்கவில்லை, ஆனால் அடிக்க வந்தார்கள்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட சுர்ஜித் “என் சுண்டு விரலில் அடிபட்டுள்ளது. ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுக்க போலீசார் அனுமதிக்கவில்லை. டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் இருவரும் என்னை அடிக்கவில்லை, ஆனால் அடிக்க வந்தார்கள் . ‘நாங்கள் சொல்வது படி நடந்து கொள்ள வேண்டும், இல்லையென்றால் உன்னுடைய பெரியம்மா, அண்ணன் ஆகியோரை வழக்கில் சேர்த்து சிறையில் அடைத்துவிடுவோம்’ என மிரட்டல் விடுத்தார்கள்,” என்று அவர் முறையிட்டார்.
இரண்டு நிமிடங்கள் மட்டுமே விசாரணை
அவரைத் தொடர்ந்து பேசிய அவரது தந்தை எஸ்.ஐ. சரவணன், “இரண்டு நாட்கள் காவலில் எடுத்தார்கள். ஆனால், என்னிடம் வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே விசாரணை நடத்தினார்கள். எந்த வாக்குமூலமும் என்னிடம் இருந்து எழுதி வாங்கவில்லை, நான் எதிலும் கையெழுத்தும் போடவில்லை. அதே சமயம், என்னை அடித்துத் துன்புறுத்தவில்லை,” என்றார்.
எந்த வழக்கில் கைது செய்திருக்கிறார்கள் என தெரியவில்லை
இதே வழக்கில் மூன்றாவதாகக் கைது செய்யப்பட்ட ஜெயபாலிடம் நீதிபதி விசாரித்தபோது, “என்னை எந்த வழக்கில் கைது செய்திருக்கிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதி ஹேமா, ஜெயபாலை அருகில் அழைத்து, “கவின் கொலை தொடர்பாக உன் தந்தை சரவணன் மற்றும் சகோதரன் சுர்ஜித் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்களோ, அதே வழக்கில்தான் உன்னையும் கைது செய்துள்ளார்கள்,” எனத் தெளிவாக விளக்கினார்.
மூன்று பேரின் முறையீடுகளையும் கேட்டறிந்த நீதிபதி ஹேமா, அவர்களைக் கூண்டிலிருந்து கீழே இறக்கி, தன் அருகில் அழைத்து, அவர்கள் கூறிய வாக்குமூலங்களைத் தானே நேரடியாக எழுதிப் பதிவு செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து, மூன்று குற்றவாளிகளையும் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, சுர்ஜித் மற்றும் சரவணன் இருவரும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிபிசிஐடி அதிகாரிகள் மீது குற்றவாளிகளே நேரடியாகப் புகார் கூறியுள்ளது இந்த வழக்கில் பரபரப்பு ஏற்படுத்தியது.