செய்திகள் :

துணை முதல்வர் பதவி: `அண்ணன் துரைமுருகன் இருக்க வேண்டிய இடம் அதிமுக’ - எடப்பாடி பழனிசாமி சூசகம்

post image

.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று (ஆகஸ்ட் 13) மாலை திருப்பத்தூர் மாவட்டத்தில் `மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி என அடுத்தடுத்து மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்குஉட்பட்ட பகுதிகளில் ஆரவாரத்தோடு வரவேற்று குவிந்திருந்த தொண்டர்கள் மத்தியில், எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, ``சென்னை மாநகராட்சியில் டாய்லெட் சுத்தம் செய்வதில் விடப்பட்ட டெண்டரில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. கக்கூஸ் கழுவதில்கூட ஊழல் செய்த ஒரே அரசாங்கம் தி.மு.க அரசாங்கம் தான். கேடுகெட்ட அரசாங்கம். கேவலமாக இல்லை?

உடல் உறுப்புகளை திருட ஆரம்பித்துவிட்டார்கள்

மக்களை ஏமாற்றுவதில், கவர்ச்சிகரமாக பேசுவதில் தி.மு.க-வுக்கு நிகர் வேறு எந்தக் கட்சியும் கிடையாது. மக்களை நம்ப வைத்து ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விடக் கூடிய ஒரே கட்சி தி.மு.க மட்டும்தான். எல்லாவற்றுக்கும் மேலாக உடல் உறுப்புகளை திருட ஆரம்பித்துவிட்டார்கள். எங்கேயாவது, தப்பி தவறிக்கூட தி.மு.க-வினரின் கிளினிக்குக்குப் போய்விடாதீர்கள். உடம்பில் கிட்னி இல்லாமல் போய்விடும். இன்று, தமிழகத்தில் மக்களுக்குப் பாதுகாப்பில்லை.

எடப்பாடி பழனிசாமி

உழைத்த துரைமுருகனுக்கு பதவி கிடைக்கவில்லை

அ.தி.மு.க ஜனநாயகம் உள்ள ஒருக் கட்சி. சாதாரண தொண்டனும் கட்சியில் உயர்ந்த பதவிக்கு வர முடியும்; முதலமைச்சர் கூட ஆக முடியும். தி.மு.க-வில் அப்படி வர முடியுமா? உதாரணத்துக்குச் சொல்கிறேன். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இருக்கிறார். சட்டமன்றத்தில் அதிக நாள்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர் துரைமுருகன் தான். வேறு யாரும் இல்லை. எமர்ஜென்சியில் ஜெயிலுக்குப் போனார்; மிசாவில் ஜெயிலுக்குப் போனார். தி.மு.க-வுக்கு உழைத்த துரைமுருகனுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை. ஆனால், கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஸ்டாலின் மகன் இன்று துணை முதலமைச்சர்.

அந்தக் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறதா? அண்ணன் துரைமுருகன் பாவம். சட்டமன்றத்தில் `பொக்குனு’ பார்த்துக்கொண்டு இருப்பார். அவர் இருக்க வேண்டிய இடம் அ.தி.மு.க. ஆனால், தி.மு.க-வில் இருப்பதால் அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சட்டமன்றத்தில் எதிர்வரிசையில் அமர்ந்திருக்கும்போது நான் நினைப்பேன். தி.மு.க-வில் பார்த்தீர்கள் என்றால் அப்பா மந்திரியாக இருப்பார்; மகன் எம்.எல்.ஏ-வாக இருப்பார். சாதாரண ஆட்கள் யாரும் தி.மு.க-வில் எம்.பி., எம்.எல்.ஏ ஆக முடியாது.

நான் எம்.ஜி.ஆரும் இல்லை; அம்மாவும் இல்லை

ஸ்டாலின் பல்வேறு அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார். `எடப்பாடி பழனிசாமி பஸ்சில் ஊர் ஊராகப் போய் எம்.ஜி.ஆரைப் போலவும், அம்மாவைப் போலவும் சவுண்டு கொடுத்து பேசுவதாக’ சொல்கிறார். நான் சவுண்டாகவா பேசுகிறேன்? மைக்கில் பேசினால் தானே உங்களுக்குக் காது கேட்கும். தமிழ்நாடு முழுவதும் நான் சென்ற இடமெல்லாம் மிகப்பெரிய எழுச்சி. அதை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் எதை எதையோ பேசுகிறார். நான் எம்.ஜி.ஆரும் இல்லை; அம்மாவும் இல்லை. இங்கே இருக்கின்ற மக்களில் ஒருவனாக இருக்கின்றேன்.

ஸ்டாலின் தனது அப்பாவின் அடையாளத்தை வைத்து தலைவராக இருக்கிறார்; முதலமைச்சராகி இருக்கிறார். எந்த உழைப்புமே இல்லாமல், ஸ்டாலின் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்திருக்கிறார். உழைத்து இந்த நிலைக்கு வந்த எங்களுக்கு எவ்வளவு தில்லு, திராணி, தெம்பு இருக்கும் என்பதையும் அவர் உணர வேண்டும்.

அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால், `உங்களுடன் ஸ்டாலின்’ என்று விளம்பரம் செய்கிறார். இத்தனை நாள்களாக குடும்பத்துடன் இருந்தார். இப்போது தான் கண்கள் தெரிந்து நம்மோடு வந்திருக்கிறார். இதில், 46 பிரச்னைகளை சொல்லியிருக்கிறார். அரசு அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரித்து, குறிப்பெடுத்துக் கொண்டுப்போய் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி பிரச்னைகளைத் தீர்ப்பார்களாம். இது நடக்கிற காரியமா?

ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடியில் திரண்ட கூட்டம்

`மக்களுக்கு 46 பிரச்னைகள் இருக்கிறது’ என்பதை கண்டுபிடிக்கவே அவருக்கு நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. மக்களை ஏமாற்றுவதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றி, உங்களின் வாக்குகளை பெறுவதற்காக ஸ்டாலின் போட்ட நாடகம். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பதைபோலவும் ஒரு மாயத் தோற்றத்தை தி.மு.க-வும், ஸ்டாலின் அரசும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இஸ்லாமிய மக்களும், கிறிஸ்துவ மக்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அ.தி.மு.க பொன்விழா கண்ட கட்சி. தமிழகத்தில் 31 ஆண்டுகாலம் சிறப்பான பொற்கால ஆட்சியைக் கொடுத்திருக்கிறோம். அப்போது, சிறுபான்மையின மக்களுக்கு அரணாக பாதுகாத்த அரசாங்கம் அ.தி.மு.க அரசாங்கம். மறுக்க முடியுமா? எங்கள் ஆட்சியில் மத சண்டை, சாதி சண்டை கிடையாது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்தது. வாக்குகாக சிறுபான்மையின மக்களை ஏமாற்றி, அவர்களின் வாக்குகளை தி.மு.க-வும், அதனுடன் அங்கம் வகிக்கும் கட்சிகளும் பறிக்க பார்க்கிறது.

இப்போது சொல்கிறேன். பா.ஜ.க உட்பட இன்னும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. கூட்டணிக்கு அ.தி.மு.க தான் தலைமை தாங்கும். அ.தி.மு.க ஆட்சி அமைக்கும். சிறுபான்மை மக்கள் பயப்படத் தேவையில்லை. சிறுபான்மையின மக்களை கண் இமைபோல பாதுகாத்த அரசாங்கம் அ.தி.மு.க. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவிலேயே ஜனாதிபதி பதவி உயர்ந்தது. மரியாதைக்குரிய மறைந்த டாக்டர் அப்துல் கலாமை ஆதரித்து அவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்து, ஜனாதிபதி இருக்கையில் அமர வைத்து அழகுப் பார்த்ததும் அ.தி.மு.க கட்சி தான். அப்துல் கலாமை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளருக்கு வாக்களித்த கட்சி தி.மு.க. இப்படி இருக்கிற கட்சியா, சிறுபான்மை மக்களுக்கு உதவி செய்யும்?

தி.மு.க சந்தர்ப்பவாத அரசியல் செய்யும். அ.தி.மு.க கொள்கையோடு கட்சி நடத்தும். 2026 சட்டமன்றத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். அ.தி.மு.க பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்து தமிழகத்தை மீட்க அனைவரும் ஆதரவு தர வேண்டும்’’ என்றார் எடப்பாடி பழனிசாமி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'முதலமைச்சருக்கு திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை' - அன்புமணி கண்டனம்

சென்னை ரிப்பன் மாளிகையில் போராடும் தூய்மை பணியாளர்கள் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " சென்னையில் இராயபுரம், திருவிக ந... மேலும் பார்க்க

Ramadoss Vs Anbumani - யார் கை ஓங்கியிருக்கிறது | Off The Record

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நடந்து வரும் மோதல் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. இந்த விவகாராத்தில் இந்த இருவரைத் தவிர வேறு சில நபர்களுக்கும் தொடர்பிருப்பது குறித்து விளக்குகிறது இந்த வீட... மேலும் பார்க்க

`பாசக்கரம் நீட்டும் ராமதாஸ் டு மன்னர் புள்ளிகளைத் தேடும் கழகங்கள்!’ | கழுகார் அப்டேட்ஸ்

கொதிக்கும் மலர்க் கட்சி சீனியர்கள்!எதிர்த் தரப்பு எம்.எல்.ஏ-வுடன் விருந்து...மலர்க் கட்சியின் மாநிலப் பொறுப்பிலுள்ள ‘சக்கர’ புள்ளி ஒருவர், சூரியக் கட்சியின் முக்கியமான எம்.எல்.ஏ ஒருவரைத் தனது படை, பரி... மேலும் பார்க்க