`பாசக்கரம் நீட்டும் ராமதாஸ் டு மன்னர் புள்ளிகளைத் தேடும் கழகங்கள்!’ | கழுகார் அப்டேட்ஸ்
மலர்க் கட்சியின் மாநிலப் பொறுப்பிலுள்ள ‘சக்கர’ புள்ளி ஒருவர், சூரியக் கட்சியின் முக்கியமான எம்.எல்.ஏ ஒருவரைத் தனது படை, பரிவாரங்களோடு சந்தித்து, அவர் வைத்த விருந்தில் பங்கேற்றிருக்கிறாராம். இது மலர்க் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘கட்சி பேதமின்றி நட்பு பாராட்டுவதில் தவறு இல்லை. ஆனால், `சக்கர' புள்ளி அந்த எல்லையைக் கடந்து, எதிர்த் தரப்பு எம்.எல்.ஏ-வுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். மலர்க் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருப்பதால், இங்கு நடக்கும் விவகாரங்களை ஆளும் தரப்புக்கு லீக் செய்யும் வேலையிலும் ஈடுபடுகிறார். தேர்தல் சமயத்தில், இது போன்ற சந்திப்புகளும் விருந்துகளும் கட்சிக்கு நல்லதல்ல...” எனக் கொதிக்கிறார்கள் மலர்க் கட்சியின் சீனியர்கள். ஆனால் `சக்கர' புள்ளியோ, ‘என் நட்பில் இருப்பவர்களை நான் சந்திக்க, யாரும் எனக்குத் தடைபோட முடியாது’ என அசால்ட் காட்டுகிறாராம்!
சமீபத்தில் கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த மன்னர் குடும்ப உறுப்பினரைக் கட்சியில் சேர்த்து, மன்னரையே கட்சியில் சேர்த்ததாக விளம்பரம் செய்தது இலைக் கட்சி. இதில் கடுப்பான சூரியக் கட்சியினர், மன்னர் வாரிசை அழைத்துவந்து தங்கள் தலைமையுடன் சந்திக்கவைத்து விளம்பரப்படுத்தினார்கள். தொடர்ந்து, தீவு நகரத்தின் முக்கியக் கோயிலிலும் அந்த மன்னர் வாரிசுக்கு முக்கியப் பதவி கொடுக்கத் தயாராகிறதாம் ஆளுங்கட்சி.
இந்தப் பரபரப்புக்கு இடையே, ‘கோட்டை’ சமஸ்தானத்தைச் சேர்ந்த புள்ளியைச் சமீபத்தில் கட்சியில் இணைத்துக்கொண்டது சூரியக் கட்சி. பதிலுக்கு, ‘தென்மாவட்டத்தில் ஏதேனும் ஜமீன் குடும்பம் அரசியல் ஆசையோடு இருக்கிறதா?’ என தேடத் தொடங்கியிருக்கிறதாம் இலைக் கட்சி. ‘சுதந்திர இந்தியாவில், ஜனநாயக ஆட்சிக்காலத்தில், பழைய மன்னர், ஜமீன்தார்களையெல்லாம் இப்படி அரசியல் விளம்பரத்துக்காகப் பெரிய கட்சிகள் வலைவிரித்துப் பிடிப்பது, கொடுமையாக இருக்கிறது. ஆனால் இப்போது, அவர்களுக்குத்தான் தேர்தல் மார்க்கெட்டில் பயங்கர டிமாண்ட்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

பனையூர்க் கட்சியின் பிரமாண்டமான நிகழ்ச்சி, தூங்கா நகரத்தில் ஏற்பாடாகிறது. அந்த நிகழ்ச்சிக்காக, அருகிலிருக்கும் அவார்ட் மாவட்டத்திலிருந்து அதிகப்படியான ஆட்களை அழைத்துவர, தலைமை உத்தரவிட்டிருக்கிறதாம். இது தொடர்பாகச் சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘ஒரு தொகுதியிலிருந்து 5,000 பேர் எனக் கணக்கிட்டு, ஏழு தொகுதிகளுக்கு 35,000 பேரை அழைத்துவர வேண்டும்’ என்று ஆணையாம். இந்த ஆணையைக் கண்டிப்பாகப் பின்பற்றியே ஆக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருப்பதால், ‘இத்தனை பேரை எப்படி அழைத்துச் செல்வது, அதற்கு ஏகப்பட்ட செலவாகுமே...’ என நிர்வாகிகள் புலம்பத் தொடங்கியிருக்கிறார்களாம். ஆனாலும், இதைத் தலைமையிடம் சொன்னால் பதவி பறிபோய்விடுமோ என்கிற கலக்கத்தில், ‘கடன் வாங்கியாவது ஆட்களை அழைத்துச் சென்றே ஆக வேண்டும்’ என்று கண்ணைக் கசிக்கிக்கொண்டே ஏற்பாடுகளைச் செய்கிறார்களாம் நிர்வாகிகள் பலரும்!
தலைநகருக்கு அருகேயுள்ள நகரத்தில், காவல் ஆணையகரத்துக்கு என்று சொந்தக் கட்டடம் இல்லையாம். இதனால், பிரபல சினிமா நடிகர் ஒருவருக்குச் சொந்தமான கட்டடத்தில், 2021-ம் ஆண்டு முதல் வாடகைக்கு இயங்கிவருகிறதாம் அந்த ஆணையரகம். வாடகையைக் கொடுக்காமல் இழுத்தடித்த காரணத்தால், மேலிட உறவுப்புள்ளியைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னாராம் அந்த சினிமா நடிகர். அதில் சுமுக முடிவு எட்டப்படாத சூழலில், நீதிமன்றத்தை அணுகிவிட்டாராம் அந்த நடிகர். இரண்டு வருடங்களுக்குள் கட்டடத்தை காலி செய்யும்படி, நீதிமன்றமும் உத்தரவிட்டுவிட்டது. ‘ஆட்சிக்கே கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்துவிட்டாரே...’ என அந்த நடிகர்மீது ஏகக் கடுப்பில் இருக்கிறதாம் மேலிடம். இந்தப் பிரச்னைக்குப் பிறகு, ஆணையரக அலுவலகத்துக்காக அரசு வாரியத்தின் இடம் ஒன்றைத் தேர்வுசெய்தார்களாம். அந்தப் பணியிலும் தொய்வு ஏற்பட்டிருக்கிறதாம்!

பா.ம.க-வில், தந்தை - மகனுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்கு, ஆளும் தரப்புதான் காரணம் என்று உறுதியாக நம்புகிறதாம் அன்புமணி தரப்பு. அதை வெளிப்படையாகச் சொல்லவில்லையென்றாலும், ஆளும் தரப்பை அன்புமணி கடுமையாக விமர்சனம் செய்வதற்கு, அதுதான் காரணமாம். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில், தி.மு.க அரசுக்கு எதிராகக் காட்டமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தி.மு.க எதிர்ப்பை உறுதிப்படுத்தியிருக்கிறார் அன்புமணி. அதற்கு, தி.மு.க-வே ரியாக்ட் செய்யாத நிலையில், ‘என் அருமை நண்பர் கலைஞர், 20 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தார். தந்தையை மிஞ்சிய தனயனாக, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை முதல்வர் ஸ்டாலின் அளிக்க வேண்டும்’ என அறிவாலயத்துக்குப் பாசக்கரம் நீட்டியதோடு, அன்புமணிக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார் ராமதாஸ்.
‘அ.தி.மு.க - பா.ஜ.க பக்கம் வண்டியைத் திருப்புகிறார் அன்புமணி. அதற்கு எதிர்த்திசையில் பயணிக்கிறார் ராமதாஸ். அவரின் ஆளும் தரப்புப் பாசத்தால், ஆகஸ்ட் 17-ம் தேதி ராமதாஸ் கூட்டவிருக்கும் பொதுக்குழுவில், தி.மு.க அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’ என்கிறார்கள் பா.ம.க-வினர்!