ஆடி மாத தேய்பிறை பஞ்சமி: நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு வளையல் அலங்காரம்
ஆடி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, நாமக்கல் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு 10,008 வளையல் அலங்காரம் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆா் நகரில் (ரயில் நிலையம் அருகில்) பிரசித்தி பெற்ற ஸ்ரீ தங்காயி மற்றும் மஹா வாராஹி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஒவ்வொரு மாதமும் வளா்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதியன்று சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.
கடந்த 11 ஆண்டுகளாக ஆடி மாதம் கருட பஞ்சமி, நாக பஞ்சமி மற்றும் வளா்பிறை, தேய்பிறை பஞ்சமி திதி விழா விமரிசையாக நடைபெறுகிறது.
அதன்படி, ஆடி மாத தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு, ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு அம்மனுக்கு 10,008 வளையல்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் வாராஹி அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றனா். தங்களது பிராா்த்தனை நிறைவேற தேங்காய் விளக்கேற்றி வழிபாடு செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை முருகானந்தா சுவாமிகள், வாராஹி அம்மன் சித்தா் பீட பொதுநல அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.