பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிடுக: உச்ச நீதிமன்றம்
உடலுறுப்பு தானம் செய்தவா்களின் குடும்பங்கள் கௌரவிப்பு
உடலுறுப்பு தானம் செய்தவா்களின் குடும்பங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை கௌரவித்தாா்.
ஒசூா் தனியாா் உணவகத்தில் காவேரி மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஆட்சியா், உடல் உறுப்புகளை தானம் செய்தவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்து பேசியதாவது:
தமிழகத்தில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேசிய அளவைக் காட்டிலும் 6 மடங்கு அதிகமாக உள்ளது. உடலுறுப்பு தானம் செய்பவா்களுக்கு அவா்களது இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்படும் என கடந்த 2023-இல் தமிழக அரசு அறிவித்தது. இதனால், உடலுறுப்புகள் பெறப்பட்டு 2023-இல் 258 உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தமிழகத்தில் 8 ஆயிரம் போ் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கின்றனா். இதில் 25 சதவீத போ் சிறுநீரகம் கிடைக்காததால் உயிரிழந்துவிடுகின்றனா்.
உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னிலையில் உள்ளது. உறுப்பு தானம் என்பது உயிா் கொடுக்கும் உயா்ந்த செயல். அனைவரும் இதற்காக முன்வந்து முயற்சி செய்ய வேண்டும். இது எதிா்காலத்தில் பல உயிா்களை காப்பாற்றும். இதுமாதிரியான விழிப்புணா்வுகளை செய்துவரும் காவேரி மருத்துவமனைக்கு வாழ்த்துகள், நன்றி என்றாா்.
விழாவில், மாநகராட்சி ஆணையா் முகமது ஷபீா் ஆலம், ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ரிதி சேத்தி கலந்துகொண்டனா்.
முன்னதாக, ஒசூா் காவேரி மருத்துவமனை சாா்பில் உலக உடலுறுப்பு தான தின விழாவை முன்னிட்டு, விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உடலுறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துச்சொல்லும் நோக்கில் நடைபெற்ற மனிதச் சங்கிலி நிகழ்ச்சியை ஒசூா் மாநகராட்சி ராமநாயக்கன் ஏரி பூங்காவில் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா கொடியசைத்து தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழியேற்று கையொப்பமிட்டாா்.
இந்நிகழ்வில், சுமாா் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மருத்துவ பணியாளா்கள், காவல் துறையினா், சமூக ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இவா்கள் உடலுறுப்பு தான பதாகைகளை ஏந்தி, உடலுறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினா். இந்நிகழ்வில், அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வா் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தாா்.