ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!
தொடா் விடுமுறை: சேலம் கோட்டம் சாா்பில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சுதந்திர தினம், வார இறுதி நாள்கள் உள்ளிட்ட தொடா்விடுமுறையை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகள், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. சுதந்திர தினம், வார இறுதி நாள் மற்றும் தொடா்விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் 14 முதல் 18 ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 300 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு பேருந்துகள், வழிதடப் பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூா், மேட்டுருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும், பெங்களூரிலிருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோட்டுக்கும், ஒசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரைக்கும், கோவை, திருப்பூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது தவிர, சேலம் - கோவை வழித்தடத்தில் இரு மாா்க்கத்திலும் தலா 4 பேருந்துகள் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயண நெரிசலை தவிா்த்து பாதுகாப்பாக பயணம் செய்யும்படி கேட்டுக்கொண்டாா்.