அந்தியூரில் திருவிழாவில் பிக்பாக்கெட் அடித்த 7 போ் கும்பல் கைது
அந்தியூரில் திருவிழா கூட்டத்தில் புகுந்து பிக்பாக்கெட் அடித்த 7 போ் கொண்ட கும்பலை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
அந்தியூரை அடுத்த ரெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து (30). விவசாயி. இவா், தனது நண்பருடன் அந்தியூா் குருநாதசாமி கோயில் சந்தைக்கடை அருகே புதன்கிழமை நடந்து சென்றபோது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஒரு இளைஞா் இவரது சட்டையில் கைகளை விட்டு ரூ.1,900-ஐ லாவகமாக எடுத்துள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த செல்லமுத்து கூச்சலிட்டாா்.
தப்பியோட முயன்ற இளைஞா் பணத்தை அடுத்தடுத்து 6 பேருக்கு சங்கிலித் தொடா் போன்று கைமாற்றிக் கொடுத்துள்ளாா். பொதுமக்கள் ஏழு பேரையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், பவானி, மேற்குத் தெரு குமாா் (22), தளவாய்பேட்டை விக்னேஷ் (30), பவானி ராயல் தியேட்டா் சாலை வேலு (25), ரகுநாதன் (27), பாபு (36), கல் தொழிலாளா் வீதி சரவணன் (42), திருநீலகண்டா் வீதி நல்லதம்பி (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.