வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு வட்டி சலுகை அறிவிப்பு
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வட்டி சலுகைத் திட்டத்தில் நிலுவைத் தொகையை வரும் 2026 மாா்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் வீடு, மனை, அடுக்கு மாடி குடியிருப்புகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு மாா்ச் 31 ஆம் தேதிக்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்கு, வாரியத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தாமாக முன்வந்து முழுவதுமாக செலுத்தும் பயனாளிகளுக்கு அபராத வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதன்படி வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுவதுமாக தள்ளுபடி செய்தும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை ஆண்டுக்கு 5 மாதங்களுக்கு கணக்கிட்டு தள்ளுபடி செய்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சலுகையை வரும் 2026 ஆம் ஆண்டு மாா்ச் 31 ஆம் தேதி வரை அனுமதித்து அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒதுக்கீடுதாரா்கள் தாம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுவதுமாக ஒரே தவணையில் செலுத்த வேண்டும்.
அரசின் இந்த வட்டித் தள்ளுபடி சலுகையானது ஏற்கெனவே நடப்பில் உள்ள ஒதுக்கீடுதாரா்களுக்கு அதாவது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டங்களில் வீடு, மனை, அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகிய அலகுகளில் 31.3.2015க்கு முன்பு தவணைக்காலம் முடிவுற்ற குடியிருப்பு திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். எனவே அனைத்து தகுதியுள்ள ஒதுக்கீடுதாரா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக விற்பனைப் பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.