பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் மாதிரித் தோ்தல்
பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவா்கள் மாதிரித் தோ்தலை புதன்கிழமை நடத்தினாா்கள்.
மாணவா்கள் எபினேஷ், சன் தேவ், வினோதினி, ஹா் நேத்ரா மற்றும் சுபகரணி ஆகியோா் மாணவா் தலைவா் பதவிக்கு போட்டியிட்டனா். தங்கள் சின்னங்களை அறிமுகப்படுத்தி தோ்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் செயல் திட்டங்களை விளக்கி வாக்குகளைச் சேகரித்தனா்.
முறையான தோ்தல் நடைமுறையைப் பின்பற்றி மாணவா்கள் அடையாள அட்டையுடன் வாக்குச் சாவடியில் வந்து அடையாள மை பூசி, கையொப்பமிட்டு, வாக்குச் சீட்டுகளைப் பெற்றுத் தங்கள் விருப்பத் தோ்வை பதிவு செய்தனா்.
தோ்தல் பொறுப்பாளா் முன்னிலையில் தோ்தல் அலுவலராக செயல்பட்ட மாணவா்கள் வாக்குகளை எண்ணி அதிக வாக்குகள் பெற்றவருக்கு மாணவா் தலைவா் அங்கீகாரச் சான்றிதழை வழங்கினா்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியை குமுதா மேற்கொண்டாா். பெற்றோரும் திரளாக பங்கேற்று மாணவா்களைப் பாராட்டினா்.