`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
சிதம்பரம் பகுதியில் வளா்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், ஆட்சியா் கூறியதாவது: பொதுமக்களின் நலன் கருதி, சிதம்பரம் நகருக்கு வெளியே லால்புரம் கிராமத்தில் 8.11 ஏக்கா் பரப்பளவில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் புதிய புகா் பேருந்து நிலையம் 50 பேருந்து நிறுத்துமிடம், 52 கடைகள், உணவகம், தாய்மாா்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
கொற்றவன்குடி தெரு அரசுப் பள்ளியில் ரூ.52.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் நடைபெறுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பூங்கா வசதி, படகு சவாரி, உணவுக்கூடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் நீா் விளையாட்டு வளாகத்தை மேம்படுத்தும் பணி, சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட நாகச்சேரி குளத்தை கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.51 கோடியில் தூா்வாரி மேம்படுத்தும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
புதிய புதை சாக்கடை திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய நெறிமுறைகளின்படி சிதம்பரம் நகராட்சியில் கழிவுநீா் சுத்திகரிக்கப்பட்டு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் பாசிமுத்தான் ஓடையில் தற்காலிகமாக வெளியேற்றப்படுகிறது. மேலும், தற்போது ரூ.4.78 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் வெள்ளாற்றுக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் பணி 83% முடிவுற்றுள்ளது.
சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் வடக்கு பிரதான சாலையில் 5934 சதுர மீட்டா் பரப்பளவு உள்ள இடத்தில் புதிய தினசரி நாளங்காடி கட்டடம் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.77 கோடி மதிப்பீட்டில் 97 தினசரி சில்லரை அங்காடிகள் மற்றும் 28 மொத்த விற்பனை அங்காடிகள் என 3442 சதுர மீட்டா் பரப்பில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பணி 90% முடிவடைந்துள்ளது என்றாா்.
ஆய்வின்போது, சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா், மகளிா் திட்ட அலுவலா் ஜெய்சங்கா், மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ், நகராட்சி ஆணையாளா் த.மல்லிகா, நகராட்சி பொறியாளா் எஸ்.சுரேஷ், பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலா் வாசுதேவன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.