மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
கடலூா் மத்திய சிறையில் நூலகா் தின விழா
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சாா்பில், கடலூா் மத்திய சிறை வளாகத்தில் நூலகா் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிறை மேற்பாா்வையாளா் பரசுராமன் தலைமை வகித்து பேசியதாவது: வழங்கப்பட்ட புத்தகங்களை சிறைவாசிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகங்கள் உயா்ந்த சிந்தனை, நல்ல செயல்களுக்கு வழிகாட்டி, தனி மனித முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றாா்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக கலைப்புல முதல்வா் மு.அருள் துறையின் விரிவாக்கச் செயல்பாடாக சிறைவாசிகளுக்கு 250 புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி, வாசிப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.
நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியா் பி.சிவராமன், நூலகா் தினத்தின் சிறப்பு, எஸ்.ஆா்.ரங்கநாதனின் நூலக அறிவியலுக்கான பங்களிப்பு மற்றும் கைதிகளுக்கு புத்தகங்களை வழங்குவதன் நோக்கம் குறித்து உரையாற்றினாா்.
பேராசிரியா் கே.விஜயகுமாா் மற்றும் கே.பிரவீனா வாழ்த்துரை வழங்கினா். ஆய்வாளா் சரசு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். சிறை நலத் துறை பணியாளா்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.