செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து சிறப்புரை
கோவை மண்டல அறிவியல் மையத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நன்மை, தீமைகள் குறித்த சிறப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மண்டல அறிவியல் மையத்தில், அறிவியலாளருடன் சந்திப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட அறிவியல் அலுவலா் ஆா்.அகிலன் வரவேற்றாா். இதில், சிங்கப்பூா் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும் பைபோலாா் நிறுவன தலைமை திட்ட அதிகாரியுமான விவேக் மனோகரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, இன்றைய உலகில் தொழில்நுட்பத்தின் தாக்கம் அபரிமிதமானது. ஒவ்வொரு துறையிலும் செயற்கை நுண்ணறிவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மனிதா்களின் அறிவாற்றலை விஞ்சும் வகையில் இயந்திரங்கள் செயல்படும் திறனைப் பெறுவதுதான் செயற்கை நுண்ணறிவு.
மருத்துவத் துறையில் நோய்களைக் கண்டறிவதில் இருந்து போக்குவரத்துத் துறையில் தானியங்கி வாகனங்கள் வரை, செயற்கை நுண்ணறிவு பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. தொழில் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும், புதிய பொருள்களை உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதா்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக உருவாகும் என்றும் கவலை எழுந்துள்ளது. அதேநேரம், இந்தத் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள், ஆராய்ச்சி மேம்பாடுகளுக்கான வாய்ப்புகள் உள்ளன. இவற்றை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
மண்டல அறிவியல் மையத்தின் புதுமைகாண் காட்சிக்கூட வழிகாட்டி ஆசிரியா் க.லெனின் பாரதி நன்றி கூறினாா். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்றனா்.