உழவா்கரை தொகுதியில் ரூ.77 லட்சம் மதிப்பில் பாலம் கட்ட பூமி பூஜை
Coolie: 'உதவி இயக்குநர் டு டாப் நடிகர்' - ஆசான் கொடுத்த சினிமா வாய்ப்பு; நிரூபித்த செளபின் சாஹிர்!
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'கூலி' திரைப்படம் நாளை வெளியாகிறது. மலையாள நடிகர் செளபின் சாஹிரை தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவர தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் பலரும் முயற்சித்தார்கள்.
அதனை தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெற்றிகரமாகச் செய்திருக்கிறார். 'கூலி' படத்தின் மூலம் செளபின் சாஹிர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார். மல்லுவுட் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கோலிவுட்டும், டோலிவுட்டும் அவரை அவ்வளவு ரசிக்கிறது.

செளபினின் முகத்தில் தென்படும் அவருடைய அப்பாவித்தனம் அவருக்கு ஒரு பலம் எனச் சொல்லலாம். குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும்போது அவருடைய இந்த அப்பாவித்தனம் அவருக்கு பெருமளவில் கைக்கொடுக்கிறது.
ஆனால், அப்படியான வேடங்களில் மட்டுமே தொடர்ந்து செய்யாமல் காமிக் வடிவிலான காமெடி கதாபாத்திரங்களிலும் செளபின் சாஹிர் மிரட்டுவார். அதுதான் அவருடைய தனித்துவம்!
காமெடி கேரக்டர், குணச்சித்திர கேரக்டர் என செளபின் சாஹிர் நடிப்பில் இப்போது மிரட்டினாலும், அவருடைய ஆசை இயக்குநராக வேண்டும் என்பதுதான்.
செளபின் சாஹிர் தந்தையான பாபு சாஹிர் 'மணிசித்தரத்தலு', 'காட்ஃபாதர்' போன்ற ஹிட் மலையாளத் திரைப்படங்களில் பணிபுரிந்தவர். உதவி இயக்குநராக மட்டுமல்ல, பாபு சாஹிர் தன்னுடைய சினிமா கரியரின் தொடக்கக் காலத்தில் புரொடக்ஷன் கன்ட்ரோலராகவும் பணிபுரிந்திருக்கிறார்.
தந்தையின் இந்த மாபெரும் சினிமாக் கனவுதான் செளபினையும் சினிமாப் பக்கம் நகர்த்தியிருக்கிறது. தந்தையினால் குழந்தை நட்சத்திரமாகவும், சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் செளபின் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால், என்னவோ செளபினுக்கு டைரக்ஷன் மீதுதான் அதிக நாட்டம் இருந்திருக்கிறது. மலையாள சினிமாவின் பிரபலங்களான சித்திக், ஃபாசில், சந்தோஷ் சிவன், ராஜீவ் ரவி, அமல் நீரத் எனப் பலருடனும் உதவி இயக்குநராக அவர் பணியாற்றியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்குநராக அறிமுகமான 'அன்னயும் ரசூலும்' திரைப்படத்தில் முதலில் செளபின் உதவி இயக்குநராகதான் பணிபுரிந்து வந்திருக்கிறார்.
ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் செளபின் சாஹிரை நடிக்க வைக்கத் ராஜீவ் ரவிக்கு தோன்றியிருக்கிறது.
இப்படத்திற்காக பெருமளவில் பாராட்டுகள் கிடைத்தப் பிறகு நடிகராகக் களமிறங்கி மல்லுவுட்டில் வரிசையாக அடுத்தடுத்து திரைப்படங்களைக் கமிட் செய்யத் தொடங்கினார்.
தொடர்ந்து நடித்து வந்த செளபின் சாஹிருக்கு 'ப்ரேமம்' திரைப்படம் மலையாள சினிமாவில் ப்ரேக் தந்தது. தொடர்ந்து 'மகேஷிண்டே பிரதிகாரம்' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த இவரின் கதாபாத்திரங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றன.
சினிமாவில் ஒரு ப்ரேக் கிடைத்தப் பிறகு டைரக்ட் செய்ய வேண்டும் என்ற ஆசைக்கான வேலைகளில் தீவிரமாக 2016-க்குப் பிறகு இறங்கினார்.
செளபின் சாஹிர் தன்னுடைய சிறு வயது கதையைத் திரைப்படமாக எடுப்பதற்கு நீண்ட நாட்களாக முயற்சித்து வந்தார்.
உதவி இயக்குநராக அலைந்து திரிந்த நாட்களில் தன்னுடைய சிறு வயது கதையைத் திரைப்படமாக எடுத்துவிட வேண்டும் என யோசித்திருக்கிறார்.

துல்கர் சல்மானுடன் தொழில்நுட்ப குழுவில் 'உஸ்தாத் ஹோட்டல்' திரைப்படத்தில் செளபின் சாஹிர் பணியாற்றியபோது இந்தக் கதையை அவரிடம் சொல்லியிருக்கிறார்.
அப்போதே இந்தக் கதை மீது துல்கருக்கு பெரும் நம்பிக்கை துளிர்த்திருக்கிறது.
ஆனால், படத்தின் முதன்மை கேரக்டரில் செளபின் புது முகங்களையே நடிக்க வைக்க விரும்பியிருக்கிறார்.
துல்கர் சல்மான் படத்தைப் வியாபார ரீதியாக பெரிதளவில் கொண்டுபோய்ச் சேர்த்திட விரும்பி கேமியோ ரோலுக்காக படத்திற்குள் வந்தார்.
அப்படித்தான் 'பரவா' திரைப்படம் உருவானது. செளபின் நினைத்தபடி, அவருடைய கதைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தத் திரைப்படம் இயக்குநராக அவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தின் பெயரையே தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கும் செளபின் பிறகு வைத்தார்.
அதன் மூலமாகத்தான் கடந்தாண்டு வசூலில் வேட்டையாடிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்தைத் தயாரித்தார்.
இவருடைய நடிப்புக்கு மலையாள சினிமாவில் நல்லதொரு பெயர் அடுத்தடுத்து கிடைக்கத் தொடங்கின.
மக்களின் வரவேற்பை பொறுப்பாக எடுத்துக் கொண்டு குறிப்பிடத்தகுந்த கதைகளைத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார்.

மம்மூட்டி, மோகன்லால் என மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த இவருடைய தமிழ் அறிமுகத்திற்கு பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
மக்களைப் போலவே, தமிழிலிருந்து நல்லதொரு கதாபாத்திரம் கிடைப்பதற்காகப் பெரும் ஆவலுடன் செளபினும் காத்திருந்தார். அந்த வாய்ப்பு இப்போது சிறப்பான தருணத்தில் கைகூடி வந்திருக்கிறது.
தயாளின் வில்லனிசத்திற்கு வெயிட்டிங் செளபின் சேட்டா!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...