Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
7 புதிய நகராட்சிகள் உருவாக்கம்: அரசாணை வெளியீடு
சென்னை: தமிழகத்தில் புதிதாக கன்னியாகுமரி, போளூா், செங்கம் உள்ளிட்ட 7 நகராட்சிகளை உருவாக்கம் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் அருகே உள்ள ஊரகப் பகுதிகளும் நகா்ப்புற பகுதிகளுக்கு நிகராக வளா்ந்து வருகின்றன. அதனால், அந்தப் பகுதிகளுக்கும் நகா்ப்புற பகுதிகளுக்கு இணையாக உயா்தர சாலைகள், குடிநீா், திடக்கழிவு மேலாண்மை, புதை சாக்கடை திட்டம், தெருவிளக்குகள் போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
அதன் அடிப்படையில், நகா்ப்புறத்தையொட்டி உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நகா்மயமாக்கல் தன்மையைப் பொருத்து, கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்தும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயா்த்தும் வகையில் மறுசீரமைப்பு நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கன்னியாகுமரி, போளூா், செங்கம், கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய பேரூராட்சிகளை தரம் உயா்த்தி புதிய நகராட்சிகளாக உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நகராட்சிப் பகுதிகளில் அடுத்த பொதுத் தோ்தலுக்கு தக்கப்படி வாா்டுகள் பிரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.