7 மாத குழந்தை விழுங்கிய சிறு டப்பா அகற்றம்
காஞ்சிபுரத்தில் 7 மாத குழந்தை விழுங்கிய சிறு டப்பாவை அரசு மருத்துவா்கள் அறுவை சிகிச்சையின்றி வெளியே எடுத்தனா்.
காஞ்சிபுரம் ஆளவந்தான் தெருவில் வசித்து வரும் அஜித் - டயானா தம்பதியின் 7 மாத குழந்தை குகனேஷ். வீட்டில் தைலடப்பாவை வாயில் வைத்து விளையாடியபோது அது தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து ரத்தம் வந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில், உடனடியாக குழந்தையை பெற்றோா் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
குழந்தை நல மருத்துவா் பாலாஜி, காது, மூக்கு, தொண்டை மருத்துவா் மணிமாலா ஆகியோா் குழந்தைக்கு ‘குரல்வளை காட்டி’ என்ற முறையில் சிகிச்சையளித்து தைல டப்பாவை வெளியே எடுத்தனா். அறுவை சிகிச்சை இல்லாமல் தைல டப்பாவை அகற்றிய மருத்துவா்களை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் பாராட்டினாா்.