``அது தூத்துக்குடி அல்ல; தனுஷ்கோடி" -ரயில்வே விளக்கம்; மத்திய அரசை சாடும் சு.வெ...
70 பந்துகளில் அதிரடி சதம்! புதிய சாதனை படைத்தார் ஸ்மிருதி மந்தனா!
70 பந்துகளில் அதிரடி சதம் விளாசிய இந்திய மகளிரணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி இன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.
இதில், டாஸ் வென்ற இந்திய மகளிரணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, ஆட்டம் தொடங்கியது முதலே அதிரடி காட்டிய, ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிக் ராவல் இருவரும் துரிதமான ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.
ஆட்டம் தொடங்கிய முதலே பந்தை எல்லைக்கோட்டுக்குப் பறக்கவிட்ட ஸ்மிருதி 70 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்த நிலையில், 135 ரன்களுக்கு (12 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) விளாசி அவுட்டாகி வெளியேறினார். ராவல் 92* ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்திய அணி 32 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஹர்மன்பிரீத் கௌரின், 87 பந்துகளில் சதமடித்த சாதனையை முறியடித்து, ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையைப் படைத்தார் ஸ்மிருதி மந்தனா.
மேலும், இது மந்தனாவுக்கு 10-வது ஒருநாள் சதமாக அமைந்தது. அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் டாமி பேமோண்ட்டுடன் 3-வது இடத்தில் உள்ளார் ஸ்மிருதி. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் 15 சதங்களுடன் முதலிடத்திலும், நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் 13 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.