விதிமுறைகளை மீறிய ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸூக்கு ரூ.7 லட்சம் அபராதம்!
72 படங்களில் 5 படம்தான் ஹிட்!
இந்தாண்டில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில் சில படங்களே வணிக வெற்றியைப் பெற்றுள்ளன.
ஆண்டிற்கு ஆண்டு திரைப்படங்களின் எண்ணிக்கையும் அறிமுக இயக்குநர்களின் வருகையையும் அதிகம் கொண்ட தமிழ் சினிமாத்துறையில் இந்தாண்டு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. இருக்கின்றன.
அந்த வகையில், இந்தாண்டு துவங்கியதிலிருந்து ஏப். 4 ஆம் தேதி நிலவரப்படி இதுவரை 72 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதில், நட்சத்திர நடிகர்களான அஜித்தின் விடாமுயற்சி, ரவி மோகனின் காதலிக்க நேரமில்லை, விக்ரமின் வீர தீர சூரன் படங்களும் அடக்கம்.
ஆனால், இவ்வளவு படங்கள் வெளியானாலும் வெற்றி விகிதம் மற்றும் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருக்கின்றன.
முக்கியமாக, இந்த 72 படங்களில் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் மட்டுமே பட்ஜெட்டைவிட (ரூ. 35 கோடி) அதிக வசூலைப் (ரூ. 160 கோடி) பெற்றுக்கொடுத்த படமாக முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 12 ஆண்டுகள் கழித்து திரைக்கு வந்த விஷாலின் மத கஜ ராஜா ரூ. 60 கோடி வரை வசூலித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
அண்மையில், நடிகர் விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் வணிக ரீதியாகவும் ரூ. 55 கோடி வரை வசூலித்துள்ளது.
அதேபோல், நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படமும் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றியைப் பதிவு செய்தது.
ஹாரர் திரில்லர் படமான, ‘மர்மர்’ மிகக் குறைந்த முதலீட்டில் உருவாக்கப்பட்டு ரூ. 7 கோடி வரை வசூலித்து வெற்றிப்பட்டியலில் உள்ளது.
விடாமுயற்சி அதிக பட்ஜெட்டில் உருவாகி ரூ. 140 கோடி வரைதான் வசூலித்திருப்பதாகக் கூறப்படுவதால் அது சரியான வெற்றியைப் பதிவு செய்யவில்லை என்றே கருதப்படுகிறது.
இப்படங்களைத் தவிர்த்து பிற படங்கள் ஹிட் ஆகவில்லை. முக்கியமாக, காதலிக்க நேரமில்லை, வணங்கான், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், அகத்தியா, கிங்ஸ்டன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பன்றி மேய்ப்பவரை வில்லனாகக் காட்டியதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்: வசந்த பாலன்