முன்கூட்டியே கடனை திருப்பிச் செலுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: ஆர்பிஐ புதிய வித...
Ajithkumar : "நிகிதாவை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்" - சொல்கிறார் முன்னாள் கணவர் திருமாறன்
"என்னை திருமணம் செய்துவிட்டு பாலும் பழமும் சாப்பிடுவதற்கு முன்பே ஒரே நாளில் ஓடியவர்தான் நிகிதா..." என்று முன்னாள் கணவரும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவருமான திருமாறன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ள நிலையில், புகார்தாரரான நிகிதா மீது, அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பலரிடமும் பணமோசடி செய்ததாக பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நிகிதாவின் முன்னாள் கணவரும், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சித்தலைவருமான திருமாறன் இன்று மடப்புரம் வந்திருந்தவர் நிகிதா குறித்து அதிர்ச்சிகராமான தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "21 ஆண்டுகளுக்கு முன்புப் என்னை திருமணம் செய்துவிட்டு பாலும் பழமும் சாப்பிடுவதற்கு முன்பே ஓடியவர்தான் நிகிதா. 3 திருமணஙகளுக்கு மேல் செய்து பலரையும் ஏமாற்றியுள்ளார். திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிப்போய்விட்டு அந்த குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் கொடுத்து மிரட்டி பணம் பறிப்பதுதான் அவர் வேலை. என்னிடமும் அவர் தந்தை 10 லட்சம் வாங்கிக்கொண்டுதான் விவாகரத்து அளித்தனர்.

திருமண மோசடியுடன் வேலை வாங்கித் தருவதாகவும் பலரை மோசடி செய்துள்ளனர். புகார் கொடுத்த இவரை போலீஸ் முழுமையாக விசாரித்திருக்க வேண்டும், நகை திருடு போனதாக சொன்னது பொய் குற்றச்சாட்டுதான். கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தன் அதிகாரத்தை காட்ட வேண்டுமென்பதற்காக புகார் கொடுத்துள்ளார். ஈகோ பிரச்சனை கொலையில் முடிந்துள்ளது. அஜித்குமார் கொலைக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். நிகிதாவை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களின் மோசடிகளுக்கு 2 எஸ்பிக்கள், ஒரு டிஎஸ்பி உதவி செய்தனர். அதுபோல் இப்போதும் அதிகாரத்தில் இருபவர்கள் இவர்களுக்கு உதவி செய்திருக்கலாம்" என்றார்.
அரசியல் கட்சித் தலைவரான திருமாறன், தன் முன்னாள் மனைவியான நிகிதா குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.