Amaran 100: ``கொட்டுக்காளி படத்தின் மூலமாக கமல் சாரின் அன்பை சம்பாதிச்சிருக்கேன்!'' - எஸ்.கே!
சிவகார்த்திகேயன் நடிப்பில் `அமரன்' திரைப்படம் கடந்தாண்டு தீபாவளி பண்டிக்கைக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
`அமரன்' திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவருக்கு நினைவுப் பரிசு ஒன்றும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், ``இந்தப் படத்தை பண்ணுவதற்கு அனுமதிக் கொடுத்த முகுந்த் வரதராஜன் அவர்களின் குடும்பத்துக்கு நன்றி. 100 சதவீதம் அவராக என்னை பார்த்திருக்கமாட்டீங்க. அந்த இடத்துல என்னுடைய அப்பாவை நான் பார்த்திருக்கேன். அதுனாலதான் அந்தக் கதாபாத்திரத்துல நடிக்கிறதுக்கு இன்னும் நம்பிக்கை கிடைச்சது. இயக்குநர் ராஜ்குமார் எப்போதும் ரொம்பவே அற்புதமாக கதை சொல்வாரு. இந்தப் படத்தை அவர் சிறப்பாக எழுதியிருந்தார். அதுனால இதை படமாக பண்றதுக்கு எந்த சந்தேகமும் இல்ல. அவர் இந்தக் கதையை எழுதியவிதம்தான் இன்று இவ்வளவு பெரிய வெற்றியாக மாறியிருக்கு. சாய் பல்லவி கூட கொஞ்ச நாள்கள் நான் வேலை பார்த்திருந்தாலும் அது நல்ல அனுபவமாக இருந்தது. சாய் பல்லவி எப்படி ஒரு காட்சியை அணுகப்போறாங்கனு நேர்ல இருந்து பார்க்கபோறேன்னு விகடன் விருது விழாவுல சொல்லியிருந்தேன்.

அதை நான் நேர்ல பார்த்தேன். நான் ஸ்கோர் பண்றேனா... இல்ல சாய் பல்லவி ஸ்கோர் பண்றாங்களா'னு நான் ஒரு நாளும் பார்த்தது இல்ல. அவங்க ஸ்கோர் பண்ணினாலும் என் ஹீரோயின் ஸ்கோர் பண்றாங்கனுதான் பார்ப்பேன். அவங்களோ நானோ ஜெயிச்சு எதுவும் பண்ண முடியாது. எங்க படம்தான் ஜெயிக்கணும். படம் பார்த்துட்டு குஷ்பு மேம் கால் பண்ணி, ``உங்களோட பீக் ஹீரோயிசம் என்ன தெரியுமா... நீங்க இல்லாமல் பத்து நிமிஷம் ஹீரோயின் கதையை எடுத்துட்டு போக அனுமதிச்சீங்கள்ல அதுதான்"னு சொன்னாங்க.
`நான் அனுமதிக்கிறதுலாம் இல்ல. அவங்க என்னோட ஹீரோயின். நான் இல்லைனாலும் பத்து நிமிஷம் அவங்க கதையைக் கொண்டு போறப்போதான் நான் அங்க இருக்கிறதாக உணர்றேன்'னு நான் குஷ்பு மேம்கிட்ட சொன்னேன். உங்களுடைய காட்சிகள் அத்தனையும் படத்துல வருமானு இயக்குநர்கிட்ட கேட்டுக்கிட்டே இருந்ததாக நேர்காணல்கள்ல சொல்லியிருந்தீங்க. அப்படியே வரும்.. அப்படியே வர்றதுக்கு அனுமதிக்கிற நடிகர்கள் சிலர் இங்க இருக்கிறாங்க. நாங்களெல்லாம் கமல் சார் படங்கள் பார்த்து வளர்ந்ததுதான் இதுக்கு காரணம். இந்தப் படத்துக்கான பூஜை நடக்கும்போது ஜி.வி. பிரகாஷ் ப்ரோ, ` இந்தப் படம் பெருசா போகும் யா'னு சொன்னாரு.

குத்துவிளக்கு ஏத்தும்போது அந்த விஷயத்தை சொன்னாரு. இந்தப் படம் ஆரம்பிக்கும்போது எனக்கும் கமல் சாருக்கும் பெரியளவிலான பரிச்சயம் கிடையாது. ஆனால், இப்போ ஒரு இனம் புரியாத சந்தோஷம் கமல் சாரை பார்க்கும்போதெல்லாம் வருது. `ஊதா கலர் ரிப்பனாக இருந்தாலும் அதுல ஒரு கூர்மை இருக்குல'னு சொல்லி இந்தப் படத்தை கமல் சார் பண்ணச் சொன்னாரு.
படம் பார்த்து முடிச்சிட்டு `ஊதா கலர் ரிப்பன் இப்போ டிரை கலர் ரிப்பன் ஆகிடுச்சு'னும் சொல்லியிருந்தாரு. இந்தப் படத்துல லாபம் அதிகமாக ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்துக்கு கொடுக்கணும்னு இயக்குநர் ராஜ்குமார்கிட்ட சொன்னேன். லாபம் வந்தால் இந்த மாதிரி இன்னும் 20 படங்கள் எடுப்பாரு. இந்தப் படத்தோட வெற்றியை எப்படி எடுத்துக்கணுன்னு நேர்ல பார்க்கும்போது கமல் சார் சொல்லியிருந்தாரு. நிச்சயமாக, இந்த வெற்றியை நான் தலைக்கு எடுத்துக்கப்போறது இல்ல சார். இதுல இருக்கிற அன்பை மட்டும் நான் எடுத்துக்கிறேன்.

இன்னும் அதிகமாக உழைக்கணும்னு இந்தப் படம் சொல்லிக் கொடுத்திருக்கு. `கொட்டுக்காளி' படத்தின் மூலமாக நீ என்ன சம்பாதிச்ச'னு என்னுடய நண்பர்கள் கேட்டாங்க. அந்தப் படத்தின் மூலமாக கமல் சாரின் அன்பை சம்பாதிச்சேன்'னு இந்த மேடையில சொல்லணும்னு நினைக்கிறேன். இப்போ கமல் சாருடைய பழையப் படங்களை பார்த்து புரிஞ்சுகிட்டால் பல நல்லப் படங்களை தேர்ந்தெடுக்கிறதுக்கான பாடங்கள் அதுல இருக்கும். இந்தப் பிறந்த்நாளுக்கு கமல் சார்தான் ஒரு வாட்ச் கிஃப்ட் பண்ணினார். அவர்கிட்ட நான் `40 வயசு ஆகுது சார்'னு சொன்னேன். இன்னும் நிறைய டைம் இருக்கு நிறைய விஷயங்கள் செய்யலாம்னு கமல் சார் சொன்னாரு." எனப் பேசியிருக்கிறார்.