ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நபர்; 14 மாவோயிஸ்ட்களை என்கவுன்ட்டர் செய்...
America: இரண்டே மாதத்தில் DOGE பொறுப்பிலிருந்து விலகிய விவேக் ராமசாமி!? - காரணம் என்ன?
குடியரசுக் கட்சி சார்பாக, பல தடைகளைக் கடந்து டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராகப் பதவியேற்றிருக்கிறார். அதே கட்சியைச் சேர்ந்த, கேரள மாநிலம், வடக்கன் சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட விவேக் ராமசாமியும் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட நிலையில், திடீரென தேர்தல் களத்திலிருந்து பின்வாங்கி, டொனால்ட் ட்ரம்புக்கு தன் ஆதரவை தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலிலும் ட்ரம்ப் வெற்றிப் பெற்றார். அப்போதே Department of Government Efficiency (DOGE) என்ற துறையில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்-வுடன் இணைந்து விவேக் ராமசாமி பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.
அதுமுதல் தொடர்ந்து DOGE-யில் முக்கியப் பொறுப்பில் இருந்தார் விவேக் ராமசாமி. இந்த நிலையில், அவர் அந்தப் பதவியிலிருந்து திடீரென விடுவிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக DOGE செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி, ``விவேக் ராமசாமி விரைவில் வேறொரு முக்கியப் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளார். அதனால் அவர் DOGE-யில் அங்கம் வகிக்க முடியாது. கடந்த இரண்டு மாதங்களாக அவர் DOGE-க்கு செய்த பங்களிப்புகளுக்காக நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அமெரிக்காவை இன்னும் சிறப்பாக்குவதற்கு அவரும் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்," எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கிடையில், ஓஹியோ ஆளுநர் மைக் டிவைனின் பதவிக்காலம் முடிவடையவிருப்பதால் அடுத்த ஆண்டு 2026 நவம்பரில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், விவேக் ராமசாமி ஓஹியோவின் ஆளுநர் பதவிக்கு போட்டியிடுவதற்காக திட்டமிட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில், ``DOGE துறை உருவாக்கதுக்கு உதவியது எனக்குக் கிடைத்த மரியாதையாக கருதுகிறேன். எலான் மஸ்க் உள்ளிட்ட அவரது குழுவினர் அரசை ஒழுங்குபடுத்துவதில் வெற்றி பெறுவார்கள் என்றும் நம்புகிறேன். ஓஹியோவில் எனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து மிக விரைவில் அறிவிக்கிறேன். அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமெரிக்காவை மேலும் சிறப்பானதாக மாற்றுவதற்கு உதவ நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.