மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை: அமைச்சர்
Asia Cup : `சென்னையில் சர்வதேச கூடைப்பந்து போட்டி; களமிறங்கும் இந்தியா!' - விவரம் என்ன?
ஆசியக்கோப்பை கூடைப்பந்துப் போட்டிக்கான தகுதிச்சுற்று சென்னையில் வருகிற 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கிறது.
சென்னையில் முதன்முறையாக சர்வதேச ஆண்கள் கூடைப்பந்து போட்டி நடக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த தகுதிச்சுற்றைப் பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்திருந்தது.
இதில் இந்திய கூடைப்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோருடன் இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவரான ஆதவ் அர்ஜூனாவும் கலந்துகொண்டார். நிகழ்வில் அவர் பேசுகையில், 'தமிழ்நாடு எப்போதுமே கூடைப்பந்தில் பிரபலமான மாநிலமாகவே இருந்திருக்கிறது. தேசியளவில் நடக்கும் போட்டிகளைக் காணவே இங்கே ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். அப்படியிருக்கையில் ஒரு சர்வதேசப் போட்டி இங்கே நடக்கிறது எனும் போது மக்கள் மத்தியில் இன்னும் வரவேற்பு அதிகமாக இருக்கும். குழந்தைகளும் கூடைப்பந்தைப் பற்றி அறிந்து ஊக்கம் பெற உதவும்.
அமெரிக்காவிலிருந்து NBA அனுபவமுடைய ஸ்காட் ப்ளெம்மிங் என்கிற பயிற்சியாளரை இந்திய அணிக்கு பயிற்சியளிக்க அழைத்து வந்திருக்கிறோம். பெண்கள் அணிக்கும் ஒரு அமெரிக்க பயிற்சியாளரை விரைவிலேயே நியமிக்கவிருக்கிறோம். அடிப்படையிலிருந்தே கட்டமைப்புகளை வலுப்படுத்தும்போது வீரர்களால் விளையாட்டில் நல்ல நிலையை எட்ட முடியும். எங்களுக்கு அரசும் போதுமான ஒத்துழைப்பை வழங்குகிறது. ஆசியக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகளை தொடங்கி வைக்க அமைச்சரையும் அழைத்திருக்கிறோம். சிறப்பான நிகழ்வாக இதை நடத்தி முடிக்க அத்தனை ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம்.' என்றார்.
நவம்பர் 22 ஆம் தேதி கத்தாருக்கு எதிராகவும் 25 ஆம் தேதி கஜகஸ்தானுக்கு எதிராகவும் இந்தியா மோதுகிறது. இந்திய அணியில் 5 தமிழக வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்தப் போட்டிகள் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவிருக்கிறது. பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.