Aus v Ind : 'அடிலெய்டு டெஸ்ட்டுக்காக ஆஸி அழைத்து வரும் அதிரடி ஆல்ரவுண்டர்' - யார் அந்த பௌ வெப்ஸ்டர்?
பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடந்திருந்தது. இதில் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மிகச்சிறப்பாக வென்றிருந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் அடுத்தப் போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டில் நடக்கவிருக்கிறது. பகலிரவு ஆட்டமாக நடக்கவிருக்கும் இந்தப் போட்டிக்காக ஆஸ்திரேலிய அணி பௌ வெப்ஸ்டர் என்கிற உள்ளூர் வீரரை தங்களின் அணியில் இணைத்திருக்கிறது. யார் இந்த பௌ வெப்ஸ்டர்?
இந்தியா - ஆஸ்திரேலிய இடையேயான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை 150 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியும் ஆஸ்திரேலிய அணியால் வெல்ல முடியவில்லை. உள்ளூரில் நடக்கும் ஒரு தொடரில் முதல் போட்டியிலேயே தோற்றிருப்பது ஆஸ்திரேலியாவுக்கு ஒருவித அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருக்கும் மிட்செல் மார்ஷூம் காயங்களால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. டிசம்பர் 6 க்குள் அவர் சரியாகவில்லையென்றால் அவருக்குப் பதில் லெவனில் எடுக்க ஒரு ஆல்ரவுண்டர் தேவை என்பதற்காகத்தான் பௌ வெப்ஸ்ட்ரை அணியில் சேர்த்திருக்கிறார்கள்.
வலதுகை வேகப்பந்து வீச்சாளர் + திடகாத்திரமான பேட்டர் ஆன இவர், தாஸ்மானியா அணிக்காக ஆடி வருகிறார். ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான செஃபீல்ட் ஷீல்ட் தொடரில் கடந்த இரண்டு சீசன்களில் மட்டும் 1788 ரன்களை 5 சதங்கள் + 9 அரைசதங்களுடன் எடுத்திருக்கிறார். நடப்பு சம்மரில் 448 ரன்களை 56 ஆவரேஜோடு எடுத்திருக்கிறார். கூடவே 16 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார். பார்டர் கவாஸ்கர் தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்தியா A - ஆஸ்திரேலியா A அணிகளுக்கிடையே நடந்த 2 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும் 145 ரன்களையும் எடுத்திருந்தார்.
இந்திய அணியும் கடந்த போட்டியில் ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி ஆகியோரை அறிமுக வீரர்களாக களமிறக்கியிருந்தது. அதேமாதிரி, ஆஸ்திரேலியாவும் தங்களுடைய பௌ வெப்ஸ்ட்ரை அறிமுக வீரராக களமிறக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...