Champions Trophy: ஒரே மைதானத்தில் போட்டிகள்; இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் அட்வா...
Bank GM `ரூ.122 கோடி' வங்கியில் திருடிய பணத்தை என்ன செய்தார்..? சிக்கிய முக்கிய புள்ளிகள்..!
மும்பையை தலைமையிடமாக கொண்டு மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் செயல்பட்டு வந்த நியூ இந்தியா கோஆப்ரேடிவ் வங்கியில் ரூ.122 கோடி கையாடல் செய்யப்பட்டு இருப்பதை ரிசர்வ் வங்கி கடந்த மாதம் கண்டுபிடித்தது. இதையடுத்து வங்கியின் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கையில் எடுத்திருக்கிறது. பணம் கையாடல் செய்யப்பட்டது தொடர்பாக வங்கியில் பொது மேலாளராக இருந்த ஹிதேஷ் மேத்தா கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்தி அவரது நண்பரும், பில்டருமான தர்மேஷ், வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அபிமன்யூ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸாரின் விசாரணையில் 2024ம் ஆண்டு வரை அபிமன்யூ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்துள்ளார். அவருக்கு கீழ் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் தலைமை அதிகாரியாக ஹிதேஷ் மேத்தா இருந்துள்ளார்.

அப்படி இருந்த போதுதான் இந்த பணத்தை கையாடல் செய்துள்ளார். இதனை கண்டுகொள்ளாமல் இருக்கவும், உதவி செய்யவும் அபிமன்யூ ஒரு கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார். ஹிதேஷ் வங்கி லாக்கரில் இருந்த பணத்தை சிறிது சிறிதாக பையில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார். அந்த பணத்தை இரண்டு பெரிய டிரஸ்ட்களில் டெபாசிட் செய்திருக்கிறார். அதோடு பில்டர் தர்மேஷிற்கு கணிசமான தொகையை ரொக்கமாக கொடுத்துள்ளார். மேலும் சோலார் பிசினஸ் செய்து வந்த தொழிலதிபர் உலகநாதன் அருணாச்சலம் என்ற அருண் பாய், வங்கி பொதுமேலாளர் ஹிதேஷ் மேத்தாவிடமிருந்து 40 கோடி ரூபாயை ரொக்கமாக வாங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதோடு உலகநாதன் மகன் மனோகரிடமும் ரூ.15 கோடியை ஹிதேஷ் கொடுத்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து விசாரணையில் தெரிய வந்தவுடன் அவர்களை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அதற்குள் உலகநாதன் தலைமறைவாகிவிட்டார். மனோகர் வேறு ஒருவரின் உதவியோடு தனது தந்தையை தலைமறைவாகிச்செல்ல உதவி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மனோகரை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் உலகநாதன் தொடர்பாக தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப்படும் என்றும், தகவல் கொடுப்பவர்களின் விவரம் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் போலீஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.