சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவுக்கு கொண்டு வருவோம்: ஹார்திக் பாண்டியா
BB Tamil 8: இவர்கள் Top 5 போட்டியாளர்கள் - ஒரு விரிவான அலசல்
அதான் சீசன் முடிஞ்சு டைட்டில் வின்னரையும் அறிவிச்சாச்சே? ‘விடாது கருப்பு’ மாதிரி எதுக்கு இன்னொரு கட்டுரை?! பிக் பாஸ் வீட்டையேகூட ஒவ்வொரு கதவா கழட்டி ஆணியைப் பிடுங்கிட்டு இருப்பாங்களே?! ஏன் இங்க தேவையில்லாத ஆணி?!
இப்படியாக உங்கள் மைண்ட் வாய்ஸ் ஓடினாலும் ‘உங்கள் பார்வையில் இந்த சீசனின் பெஸ்ட் 5 போட்டியாளர்கள் பற்றி எழுதுங்களேன்’ என்று பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் (ஒரே ஒருவர்தான்!) கேட்டதால் இந்தக் கட்டுரை. என்னதான் மக்கள் கருத்து என்கிற பெயரில் பிக் பாஸ் டீம் முடிவுகளை அறிவித்தாலும் அதைப் பற்றிய மாற்றுக்கருத்துக்களும் இருக்கும்தானே?!
ஆகவே இந்தக் கட்டுரையில் இந்த சீசனின் டாப் 5 போட்டியாளர்களாக வந்திருக்க வேண்டியவர்களைப் பற்றி பேசப் போகிறோம். கவனிக்க, இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட அளவுகோல்களை (விருப்பமல்ல) வைத்து உருவாக்கப்பட்ட பட்டியல். இது கணிசமானவர்களின் அபிப்ராயத்தோடு பொருந்திப்போனால் மகிழ்வேன். பொருந்தாமல் போவதற்கும் சில சதவீதம் வாய்ப்புள்ளது. அப்படி இருப்பதுதானே இயல்பு?!
‘விடாமுயற்சி’ நபர்கள்
ஓகே. என் பார்வையில், சீசன் 8-ன் டாப் ஐந்து போட்டியாளர்களைப் பற்றிப் பார்த்துவிடுவோமோ?!
இந்த சீசனில் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழைந்த ஆர்டரின் வரிசையில் நினைவுகூர்வோமா? 1) ரவீந்தர், 2) சாச்சனா, 3) தர்ஷா குப்தா, 4) சத்யா, 5) தீபக், 6) ஆனந்தி 7) சுனிதா, 8) ஜெப்ரி, 9) ரஞ்சித் 10) பவித்ரா, 11) சவுந்தர்யா, 12), அருண் பிரசாத், 13), தர்ஷிகா, 14) விஷால், 15) அன்ஷிதா, 16) அர்னவ், 17) முத்துக்குமரன், 18) ஜாக்குலின்.
பிறகு 28-வது நாளில் வைல்ட் கார்ட் என்ட்ரிகளாக நுழைந்தவர்கள் 19) ரியா, 20) ராணவ், 21) வர்ஷினி, 22) மஞ்சரி, 23) சிவா, 24) ரயான்.
இந்த அத்தனை பெயர்களையும் முகங்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் ஒரு முறை நினைவுகூர்ந்து கொள்ளுங்கள். இப்போது உங்கள் மனதில் யார் பெஸ்ட் ஐந்து என்று தன்னிச்சையாக ஒரு பட்டியல் தோன்றலாம். அதனுடன் என்னுடைய தோ்வு பொருந்துகிறதா என்று பார்ப்போம்.
அப்படியாக மைண்ட் வாய்சில் பார்க்கும்போது சில குதிரைகள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி விடும். இன்னமும் சில குதிரைகள் சற்று போராடி பின்பு பின் வாங்கியதாக இருக்கும். ஆனால் சில குதிரைகள் மட்டுமே இறுதி வரை போராடியதாக இருக்கும். அப்படியான ‘விடாமுயற்சி’ நபர்களை மட்டுமே இந்தப் பட்டியலில் இணைக்க வேண்டும்.
ஒரு போட்டியாளரின் வெளியுலக பிம்பங்கள், சர்ச்சைகள், பிளஸ் பாயிண்ட்டுகள், மைனஸ் அம்சங்கள் போன்ற அனைத்தையும் விட்டு ‘இந்த ஆட்டத்திற்குள் அவரது பங்களிப்பு என்னவாக இருந்தது’ என்கிற ஒரே அம்சத்தை மட்டும் வைத்து இந்தப் பட்டியலைத் தீர்மானிபோம்.
TOP 5 போட்டியாளர் - ஜாக்குலின்
ஷஏன் ஜாக்குலின்? பிக் பாஸ் வரலாற்றிலேயே தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் நாமினேட் ஆகி மக்களால் தொடர்ந்து காப்பாற்றப்பட்ட பிரத்யேகமான பெருமை ஜாக்குலினுக்கு மட்டுமே இருக்கிறது. எனில் சக போட்டியாளர்களால் அவர் வெறுக்கப்பட்டாலும் ‘ஆட்டத்தில் தொடர வேண்டும்’ என்று மக்கள் விரும்பியிருக்கிறார்கள். இந்த நோக்கில் மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்றவராக ஜாக்குலின் இருந்தார் என்பது பிரதானமான காரணம்.
வந்த முதல் நாளிலேயே தன்னுடைய ஆட்டத்தை தீவிரமாக ஆரம்பித்து விட்டார். ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியாளர்களின் படுக்கை அறைகள் தோ்வு செய்யப்பட்ட நிலையில், மீதமிருக்கும் போட்டியாளர்கள் வராத நிலையில் போடப்பட்ட ஒப்பந்தம் செல்லுபடியாகாது என்கிற நியாயமான காரணத்தைச் சொல்லி தன் ஒத்துழையாமை போராட்டத்தை ஆரம்பித்தார். அறையின் வெளியில் தூங்க ஆரம்பித்தார். பிறகு சக போட்டியாளர்களுடன் இணக்கத்தைப் பேண வேண்டும் என்கிற காரணத்தைச் சொல்லி இதை அவரே தளர்த்திக் கொண்டாலும் அந்த ஆரம்ப வேகம் நன்று.
பெண்கள் பொதுவாக டாஸ்க்குளில் பின்தங்கி விடுவார்கள் என்று சொல்லப்படுகிற காரணத்தைத் தாண்டி பல டாஸ்குகளில் மிக ஆர்வமாக பங்கு கொண்டு இயன்ற வரை போராடினார். இந்தப் போராட்டத்தின் உச்சம் என்று பணப்பெட்டி டாஸ்க்கை சொல்லலாம். பயத்தை வெளிக் காட்டுவது பலவீனம் என்று நினைக்காமல் ‘எனக்கு பயமா இருக்கு’ என்றே புலம்பிக் கொண்டிருந்தார்.
தன்னுடைய உடல் எடை காரணமாக வேகமாக ஓட முடியாதோ என்று நினைத்திருக்கலாம். பெட்டி டாஸ்க்கில் பவித்ராவிற்கு விட்டுத்தரும் பெருந்தன்மையும் இருந்தது.
ஆனால் ஒரு கட்டத்தில், சக போட்டியாளர்கள் மற்றும் பிக் பாஸ் தந்த உத்வேகம் காரணமாக அச்சத்தை உதறிப் போட்டியில் இறங்கி, பாதியிலேயே திரும்பி விடாமல் இறுதி வரை போராடி 2 விநாடிகளில் வெற்றியைத் தவற விட்டாலும் இந்தத் தோல்விதான் ஜாக்குலினை அசாதாரணமான போட்டியாளராகக் காட்டியது. பிக் பாஸூம் டிராஃபியை உடைக்காமல் எடுத்துச் செல்லும் சிறப்புச் சலுகையை தந்தார். “நீங்க மிடில் பென்ச் இல்ல. முதல் பென்ச்” என்று பாராட்டினார். மக்களின் வாக்கு காரணமாக அல்லாமல், டாஸ்க்கில் தோற்றதாலேயே ஜாக்குலினின் எவிக்ஷன் நடந்தது.
பிக் பாஸ் போன்ற நுட்பமான போட்டியில் தன் மனதில் உள்ளதைக் கச்சிதமான வார்த்தைகளாகத் தேர்வு செய்து வெளிப்படுத்துவது முக்கியம். இந்தக் கோணத்திலும் ஜாக்குலினின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. எந்தவொரு விவாதத்திலும் தன் தரப்பை வலுவாக முன் வைப்பார். விட்டுத்தர வேண்டிய சூழலில் விட்டுத் தருவார். வார இறுதி எபிசோடுகளில் விஜய் சேதுபதியிடம் சில நேரங்களில் பல்பு வாங்கினாலும் பல சமயங்களில் இவரது வாதத் திறமை அபாரமாக இருந்ததைக் காண முடிந்தது.
குழு மனப்பான்மையோடு ‘கோவா கேங்’ உருவாக்கி அதற்கு தலைமையேற்றது, அந்தந்த வாரங்களில் பிரகாசிப்பவர்களோடு இணைந்துகொண்டு அந்தப் பெருமையின் மூலம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள நினைத்தது, நண்பர்களைச் சேர்த்துக்கொண்டால் நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாம் என்று கணக்குப் போட்டது போன்ற பலவீனமான அம்சங்கள் இருந்தாலும் இந்த ஆட்டத்தில் தனது தீவிரமான பங்களிப்பைத் தந்த காரணத்தினால் ஜாக்குலின் ஐந்தாம் இடத்தைப் பெறுகிறார்.
TOP 4 போட்டியாளர் - மஞ்சரி
வைல்ட் கார்டு என்ட்ரிகளில் நுழைபவர்களுக்கு பலமும் பலவீனமும் இருக்கிறது. வெளியில் இருந்து நிகழ்ச்சியைப் பார்த்து வந்திருப்பது பலம் என்றாலும் ‘பாதியில் நுழைந்தவர்தானே?’ என்கிற பாயின்ட் இவர்களின் முன்னால் எப்போதும் தடையாக நிற்கும். ஆனால் இது அந்த ஆட்டத்தின் விதி. அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.
இந்தத் தடையைத் தாண்டி டாப் 5-க்குள் ஒருவர் நுழைவதே சிரமம் என்னும் போது கடந்த சீசனில் டைட்டிலையே வென்று சாதனை ஏற்படுத்தினார் அர்ச்சனா. புலி பதுங்கிப் பாய்வதுபோல ஆரம்பத்தில் அனுதாபத்தைப் பெற்று பிறகு சரமாரியாக திருப்பியடித்ததின் மூலம் ‘அப்படிப் போடு’ என்று மக்களைத் துள்ள வைத்து வெற்றிக் கோட்டை எட்டியவராக அர்ச்சனாவைச் சொல்லலாம்.
இந்த சீசனில் அப்படியொரு குதிரைதான் மஞ்சரி. ‘பேசிப் பேசியே மண்டையைக் கழுவாறாம்ப்பா” என்று முத்துவிற்கு இருந்த பலத்திற்கு சரியான போட்டியாளராக உள்ளே நுழைந்தவர். அபாரமான சிந்தனையும் பேச்சுத் திறமையும் இவரது பலமாக இருந்தது. இவரும் முத்துவும் பேச்சுப் போட்டிகளின் வழியாக நண்பர்களாக இருந்தாலும் கூட அந்த நட்புணர்ச்சியானது ஆட்டத்தில் நுழைவதற்கு இவர்கள் அனுமதிக்கவில்லை. மோத வேண்டிய இடங்களில் மோதினார்கள். முத்து இந்த விஷயத்தில் பெரும்பாலும் கறாராக இருந்தார். ஆனால் மஞ்சரி சில இடங்களில் நண்பனின் தயவை எதிர்பார்த்த மாதிரி தெரிந்தது.
அதேதான். ஜாக்குலினுக்கு சொன்னதுதான். பெண்கள் டாஸ்குகளில் பின்தங்கி விடுவார்கள் என்கிற பொதுவான அபிப்ராயத்தைத் தாண்டி அனைத்துப் போட்டிகளிலும் ஆவேசமாகப் போராடுவதில் மஞ்சரி எப்போதும் சளைத்ததில்லை.
வார இறுதி விசாரணைகளில், மற்றவர்கள் தன்னை சுற்றலில் விடும் போது, தெளிவான, துல்லியமான, வெளிப்படையான பதில்களை விஜய்சேதுபதி எதிர்பார்க்கும்போது முதலில் அழைக்கும் நபர்களில் ஒருவராக மஞ்சரி இருந்தார். அனுதாப நோக்கில் ஜெப்ரிக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வழங்கப்பட்ட போது ‘அவன் இந்த வீட்டில் அனைவருக்கும் பிரியமானவன்’ என்கிற காரணத்தை தேங்காய் உடைத்தது போல் சபையில் சொல்லி மக்களின் கைத்தட்டலைப் பெற்றது ஓர் உதாரணக் காட்சி.
‘காய்த்த மரம்தான் கல்லடி படும்’. அது போல பிக் பாஸ் வீட்டின் பெரும்பான்மையான போட்டியாளர்களால் - குறிப்பாக பெண்கள் - வெறுக்கப்படும் நபராக மஞ்சரி இருந்தார். ‘பிரச்னையை ஏற்படுத்துபவர்’ என்கிற முத்திரையைச் சொல்லி நிராகரிக்கப்படும் நபராக இருந்தார். அதற்காக மனம் வருந்தித் தனிமையில் அழுதார். ஆனால் ஒரு கட்டத்தில் அனைத்தையும் உதறிப் போட்டு தவிர்க்க முடியாத நபராக உருமாறினார்.
அந்த வீட்டிலேயே ‘மேம்’ என்கிற மரியாதையைப் பெற்றவர் மஞ்சரி மட்டுமே. இப்படியான பல சிறப்பு அம்சங்கள் காரணமாக, மஞ்சரி 4-ம் இடத்தைப் பெறுகிறார்.
TOP 3 போட்டியாளர் - தீபக்
‘சாதிக்க வயது ஒரு தடையில்லை’ என்பதை நிரூபிக்கும் அசாதாரணமான நபர்களில் ஒருவராக, பிக் பாஸ் வீட்டில் தன்னை நிரூபித்தார் தீபக். பொதுவாக வயது அதிகமானவர்கள் இந்தப் போட்டியில் இருந்து விரைவில் வெளியேறுவதே வழக்கமான அம்சமாக இருந்தது. ஆனால் 45 வயதாகும் தீபக், 98 நாட்கள் வரை தாக்குப் பிடித்ததை மிக ஆச்சரியமான விஷயமாகவும் பாராட்டத்தக்க அம்சமாகவும் சொல்லலாம்.
‘இவர் அதிக நாள் தேற மாட்டார்’ என்றுதான் தீபக்கைப் பற்றி தோன்றியது. அந்தளவிற்கு சிடுமூஞ்சி ஆசாமியாக, ஸ்கூல் ஹெட்மாஸ்டர் போல் இருந்தார். கிச்சன் ஏரியாவிலும் உரையாடல்களிலும் இவரது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றார். இவருடைய எலீட் மனோபாவத்தைக் கொண்டு சிக்கலான ஆங்கிலச் சொற்களை இறைத்து மற்றவர்களை மட்டம் தட்ட முயன்றதாகத் தோன்றியது.
என்றாலும் இவரது தலைமைப் பண்புதான் இவரைக் காப்பாற்றியது. குறிப்பாக கேப்டனாக பதவியேற்ற வாரத்தில் இவரது ஆட்டத்தின் கிராஃப், பங்குச்சந்தை போல திடீரென மேலே ஏறியது. ‘இதுவரை நடந்த அத்தனை சீசன்களையும் வைத்து சொல்கிறேன். இந்த சீசனில் இந்த வாரம்தான் மிகச்சிறந்த கேப்டன்சி நடந்தது. அந்த வகையில், `நீங்கள்தான் பெஸ்ட் கேப்டன் ஆஃப் ஆல்டைம்’ என்று பிக் பாஸே உணர்ச்சிவசப்பட்டு பாராட்டும் வகையில் அந்த வாரத்தை சிறப்பாக வழிநடத்தினார்.
என் பையனை பெருமைப்படுத்திட்டேன்
சிடுமூஞ்சி ஆசாமியாக கருதப்பட்ட தீபக், பிறகு சக போட்டியாளர்களின் மதிப்பையும் அன்பையும் பெற்று ‘தீபக் அண்ணா’வாக பிரமோஷன் பெற்றார். இந்த மாற்றம் மிக ஆர்கானிக்காக நடந்தது. பாய்ஸ் டீமிற்கு ஆதரவாக இருப்பவர் என்கிற பெயரை ஆரம்பத்தில் அடைந்தாலும் (மஞ்சரியுடன் நிகழ்ந்த சண்டை) பிறகு பெண்களின் மதிப்பையும் சம்பாதித்தவர்.
தன் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாத தீபக், குடும்பம் வந்த நாளில் உடைந்து அழுது கதறி விட்டார். “என் பையனை பெருமைப்படுத்திட்டேன். எனக்கு அது போதும்” என்று சொன்னது குடும்பத்திற்காக இவர் எத்தனை முக்கியத்துவமும் அன்பும் தருகிறார் என்பதற்கான சாட்சியாக இருந்தது. ‘உங்களை மாதிரி ஒரு அப்பா வேணும்’ என்று அன்ஷிதா ஏங்குமளவிற்கு சிறந்த தந்தைக்கான உதாரணமாக இருந்தார்.
‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பது மாதிரி, ஆட்டத்தில் சிறந்து விளங்கியவர்களுள் ஒருவரான முத்துவின் மீது தீபக்கிற்கு தனியான பாசம் இருந்தது. “என் தம்பி முத்துக்குமரன்” என்று பாசத்தைப் பொழிந்தார். தன்னைக் காட்டிலும் தகுதிகொண்ட முத்து டைட்டில் வெல்ல வேண்டும் என்பதே அவரது உள்ளார்ந்த விருப்பமாக இருந்ததைப்போல் தெரிந்தது. ஆரம்ப வாரத்திலேயே காலில் அடிபட்டிருந்தாலும் டாஸ்க்குகளில் இவர் காட்டிய முனைப்பும் ஆவேசமும் பாராட்டத்தக்க அளவில் இருந்தது.
விசாரணை நாட்களில் மற்றவர்கள் சொதப்பும் போது ‘வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக’ சொல்லி விடுவதில் சிறந்தவராக இருந்தார்கள். ‘மஞ்சரியை ‘மேம்’ என்று சக போட்டியாளர்கள் அழைக்கும்போது, தீபக்கை ‘சார்’ என்கிற உள்ளார்ந்த மரியாதையுடன் அழைத்துக் கொண்டிருந்தார் விஜய்சேதுபதி. ‘கரெக்டா பேசறான்யா இந்தாளு’ என்று பார்வையாளர்களின் மதிப்பையும் பிரியத்தையும் சம்பாதித்து வைத்த போட்டியாளர்களுள் முன் வரிசைப் பட்டியலில் இருந்த காரணத்தினால் தீபக் மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் தகுதியைக் கொண்டவராகிறார்.
TOP 2 போட்டியாளர் - ரயான்
இன்னொரு வைல்ட் கார்ட் குதிரை. தன் பலத்தைக் குறித்து தானே அறியாத விளையாட்டு பிள்ளையாக இருந்தார். பெண்கள் விரும்பும் கண்ணனாக கேர்ல்ஸ் டீமின் பக்கமே சுற்றிக் கொண்டிருந்தார். குறிப்பாக சவுந்தர்யாவின் நெருக்கமான நண்பராக இருந்தார். ‘கோவா கேங்கின்’ உறுப்பினர்களுள் ஒருவர். ஜாக்குலின் மீதும் இறுதி வரை பாசத்தைக் காட்டினார்.
ரேஸில் பின்தங்கி நிச்சயம் தோற்றுவிடும் என்று கருதிக் கொண்டிருந்த ஒரு குதிரை, திடீரென வேகம் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தால் கூட்டத்தினர் எவ்வாறு ஆச்சரியமும் அதிசயமும் கொள்வார்களோ, அப்படியொரு மாற்றம் ரயானுக்குள் நிகழ்ந்தது. ‘கோவா கேங்’ குறித்து விசே வைத்த கடுமையான விமர்சனம், குடும்பச் சந்திப்பு நடந்த போது ரயானின் அக்கா போட்ட வலிமையான தடுப்பூசி போன்ற விஷயங்கள் இவரை விழிக்க வைத்தன.
‘நெருப்புக்குழி’ டாஸ்க்கில் அப்படியொரு மேஜிக்கை நிகழ்த்தினார். அதுவரை கடுமையான போட்டியாளர் என்று எவருமே எதிரில் இல்லாத முத்துவிற்கு நெருக்கடி தருமளவிற்கு மின்னல் வேகத்தில் முன்னேறினார். ‘Task Beast’ என்கிற பட்டப்பெயரைப் பெற்றார். பொம்மை டாஸ்க்கில் ராணவ்வுடன் அடிதடியில் ஈடுபட்டு கெட்ட பெயரை வாங்கினாலும் தன்னுடைய இயல்பான நற்குணத்தினால் மீண்டு வந்தார். கோவா கேங் என்பதில் அதிகாரபூர்வமாக இல்லையென்றாலும் அந்த நட்பைத் துண்டித்துக் கொள்ளாமல் சவுந்தர்யாவிற்கும் ஜாக்குலினுக்கும் இடையிலான நட்பின் பாலமாக இருந்தார்.
முதல் ஃபைனலிஸ்ட்
டிக்கெட் டூ ஃபினாலேவை முத்துதான் வெல்வார் என்று பெரும்பாலோனோர் கணித்த போது தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் அனைத்து டாஸ்க்குகளிலும் திறமையாக ஆடி டிக்கெட்டைப் பெற்றார். வீட்டிற்குள் கடைசியாக நுழைந்த ரயான், முதல் ஃபைனலிஸ்ட் என்கிற பெருமையைப் பெற்றார். பணப்பெட்டி டாஸ்க்கிலும் இவரது வேகமும் விவேகமும் கலந்திருந்தது. இவரைச் சமாளிக்க முடியாமல் முத்து பல்வேறு கூட்டணிகளை அமைக்க வேண்டியிருந்தது.
விரைவில் வெளியேறி விடுவார் என்று கணிக்கப்பட்ட ஒரு வைல்ட் கார்டு போட்டியாளர், சட்டென்று சுதாரித்துக் கொண்டு முன்வரிசையில் இருந்தவர்களுக்கு கடுமையான நெருக்கடியைத் தந்து முன்னேறிய வேகம் அசாரணமானது. ‘இப்போதும் காலம் கடந்து விடவில்லை. இப்போது முயன்றால்கூட வெற்றி இலக்கை அடையலாம்’ என்பதற்கான முன்னுதாரணமாக இருந்த காரணத்தினால் டாப் 2 இடத்தை ரயானுக்கு உத்தரவாதமாக தரலாம்.
TOP 1 போட்டியாளர் - முத்துக்குமரன்
‘24 மணி நேரத்தில் என் குடும்பத்தைப் பற்றிக் கூட தினமும் பத்து நிமிடம்தான் நினைப்பேன். மற்றபடி இந்த ஆட்டத்தைப் பற்றித்தான் என் யோசனை ஓடிக் கொண்டேயிருக்கும்’ - காப்டன்சி டாஸ்க்கில் பவித்ராவிற்கு விட்டுத் தந்து பிக் பாஸிடம் கடுமையாக வாங்கிக்கொண்ட சமயத்தில் முத்து புலம்பிய விஷயம் இது. நிதர்சனமான உண்மை என்பதை பார்வையாளர்களும் சரி, சக போட்டியாளர்களும் சரி, கணிசமான சதவீதத்தினர் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மை இது.
எந்தவொரு வகுப்பிலும் தொடர்ந்து முதல் மதிப்பெண் வாங்குகிற ஒரு மாணவன் இருப்பான். படிக்கும் மாணவர்கள், பின்பெஞ்ச் மாணவர்கள் ஆகிய இரு தரப்பாலும் பொறாமையும் வெறுப்பும் அவன் மீது இருக்கும். அப்படியொரு மாணவனாக முத்துக்குமரனைச் சொல்லலாம்.
‘வெறும் பேச்சுதான்.. பேசற திறமையை வெச்சுக்கிட்டு காலத்தை ஓட்டறே. மத்தபடி வெறும் டமுக்கு டப்பா’ என்று கடுமையான வெறுப்பில் அருண் சொன்னது இது.
பேச்சுத்திறமை மட்டுமா முத்துவைக் காப்பாற்றியது?! எனில் மஞ்சரி ஏன் வெளியேறினார்?, நல்ல தமிழில் பேசுவதுதான் பிக் பாஸ் டைட்டிலை வெல்வதற்கான தகுதி என்றால் வைரமுத்து போன்றவர்கள் உள்ளே வந்தால் உத்தரவாதமாக பரிசை வெல்லலாமே?!
‘மத்தவங்க மண்டையைக் கழுவறவன்’ என்றொரு தொடர்ச்சியான புகாரும் முத்துக்குமரன் மீது இருக்கிறது. “அவன் மத்தவங்களுக்கு புரிய வைக்கறான். கடைசில அவங்களே குமரா. நீ சொன்னதுதான் கரெக்ட்டுன்னு ஒத்துக்கறாங்க. என் பிள்ள பிரையின் வாஷ் பண்ணலை” என்று ஃபினாலே நாளில் முத்துக்குமரனின் அம்மா சொன்னார்.
சரி, அது பிள்ளைப் பாசத்தில் அவர் சொன்னதாக இருக்கட்டும். இந்த 105 நாட்களில் நாம் பார்த்த காட்சிகள் என்ன? பிக் பாஸ் ஒரு சிக்கலான டாஸ்க் தரும் போது அதை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் பலரும் விழிப்பார்கள். அப்போது முதல் ஐடியாவைத் தருவது முத்துக்குமரனாகத்தான் இருக்கும். “இல்லல்ல.. இதுல உனக்கு ஆதாயம் இருக்கு” என்று மற்றவர்கள் அதை ஆட்சேபிக்கும் போது “சரிப்பா.. நீங்களே சொல்லுங்க.. என்ன பண்ணலாம். நான் கேட்டுக்கறேன்” என்று முத்து கேட்கும் போது சரியான பதிலகள் வராது.
முத்து மற்றவர்களின் மண்டையைக் கழுவுகிறவராகவே இருக்கட்டும். ஒரு வாதத்திற்கு அப்படி வைத்துக் கொள்வோம். மைண்ட் கேம் என்பது இந்த ஆட்டத்தின் ஒரு பகுதிதானே?! அப்படி மைண்ட் கேம் ஆடிய ரவீந்தரே ‘முத்து’ வெல்ல வேண்டும் என்றுதானே பி.ஆர். வேலை பார்த்தார்?! ஒரு உறைக்குள் இரண்டு கத்தி இருக்க முடியுமா?! ‘அவன் மண்டையக் கழுவிட்டான்’ என்று ஒருவர் சொல்வார் எனில் ‘நான் ஏமாந்து விட்டேன்’ என்று வாக்குமூலம் தருகிறார் என்றே பொருள். இன்னொருவரின் பேச்சில் மயங்குவது, மயக்குபவரின் தவறா, மயங்கியவரின் தவறா என்பது ஒரு லாஜிக்கல் கேள்வி.
ஜாக்பாட் அடித்த குதிரை
ஆரம்பம் முதலே இந்தக் குதிரை நிச்சயம் ஜாக்பாட் அடிக்கும் என்று சக போட்டியாளர்களாலும் சரி, கணிசமான பார்வையாளர்களாலும் சரி, எதிர்பார்க்கப்பட்டவர் முத்துக்குமரன். இந்த ஷோவிற்கு முன் முத்துக்குமரனை பலருக்கும் தெரியாது. (பேச்சுப் போட்டி வீடியோக்களைப் பார்த்தவர்கள் தவிர). எனக்கும் கூட இவரை அதிகம் பரிச்சயமில்லை. என்றாலும் ஆரம்பம் முதலே ஆட்டத்தில் இவர் காட்டிய ஈடுபாடும், புத்திசாலித்தனமும், சமயோசிதமும், வீரமும், விவேகமும் இவரை தனித்துக் காட்டும் அம்சங்களாக இருந்தன.
விசாரணை நாட்களில் மற்றவர்கள் மயங்கி தயங்கும் நேரத்தில் தன் தரப்பு வாக்குமூலத்தை ஆழமாகவும் சுவாரசியமாகவும் கோர்வையாகவும் முன்வைப்பதில் முத்து வல்லவராகத் திகழ்ந்தார். மற்றவர்களை ‘உக்காருங்க’ என்ற சலித்துக் கொண்டே உட்கார வைக்கும் விசே கூட “நீங்க சொல்லுங்க முத்து” என்று விரும்பி கேட்கும் போட்டியாளர்களில் முன்னணியில் இருந்தார். இவர் எழும் போதெல்லாம் பார்வையாளர்களின் கைத்தட்டல் அதிகமாக இருந்தது என்பதே இவர் மக்களால் விரும்பப்பட்டவர் என்பதற்கான சாட்சி.
சுருக்கமாகச் சொல்லப்போனால், பிக் பாஸில் ஆடுவதற்கென்றே ஒருவன் கடுமையான பயிற்சி எடுத்து வந்தால் எப்படியிருக்குமோ, அப்படி இருந்தது முத்துவின் ஆட்டம். “ஒருத்தன் தன்னோட உழைப்பால முன்னேற விரும்பி, வெறித்தனமா ஓடறான்னா.. அதுக்கான உதாரணத்தை வேறெங்கும் தேட வேண்டாம். முத்துக்குமரனைப் பார்க்கலாம்” என்று தான் எவிக்ட் ஆன நாளில் அருண் சொன்ன நினைவு.
கூட்டிக் கழித்துப் பார்த்தால், முத்துக்குமரன் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் பல்வேறு விதங்களில் டைட்டிலை ஜெயிப்பதற்குத் தகுதியான போட்டியாளராக முத்துவை மட்டுமே பார்க்க முடிகிறது. “நான் கூட பயந்துட்டேன். என் கையைத் தூக்கிடுவோங்ளோன்னு” என்று ரன்னர்-அப்பாக வந்த சவுந்தர்யாவே ஒப்புக் கொள்ளுமளவிற்கு முத்துவின் திறமை அசாதாரணமாக பிரகாசித்தது. எனவே டாப் 1 என்கிற தகுதியை முத்துக்குமரன் அடைவதற்கு மிகப் பொருத்தமான நபராக ஆகிறார்.
இந்த டாப் 5 பட்டியலில் பலருக்கு உடன்பாடும் சிலருக்கு மாற்றுக் கருத்துகளும் நிச்சயம் இருக்கக்கூடும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி இது என்னுடைய தனிப்பட்ட அளவுகோல்களின் படி உருவாக்கப்பட்ட பட்டியல். கணிசமானவர்கள் இதனுடன் உடன்படுவார்கள் என்கிற நம்பிக்கையுண்டு. அதே சமயத்தில் உடன்படாதவர்களின் கருத்துக்களையும் மதிக்கிறேன்.
இதர போட்டியாளர்களின் பலம் மற்றும் பலவீனம் பற்றி விவரித்து எழுதினால் அது இன்னொரு கட்டுரையாக மாறக்கூடிய அபாயம் இருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
நாம் ரசிக்கின்ற, விரும்புகின்ற போட்டியாளர் வெல்ல வேண்டும் என்கிற ஆவேசத்தை விடவும் தகுதியான போட்டியாளர் வெல்ல நினைப்பதுதான் உண்மையான ரசிக மனோபாவத்தின் அடையாளம் என்று முன்னர் எழுதியிருந்தேன். இப்போதும் அதையே கூறி இந்த டாப் 5 பட்டியலை உங்கள் முன் வைக்கிறேன்.
ஏற்றுக் கொள்வோர் வழிமொழிக! மாற்றுக்கருத்துள்ளோர் தங்களின் கருத்துக்களை கமென்ட் பாக்சில் பகிர்ந்து கொள்க! நன்றி.